விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ரூ.2,000 கடன் பிரச்னையில் நண்பரைக் குத்தி கொலை செய்ததாக, 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் பெலாகுப்பம் சாலையில் உள்ள பாரதிதாசன் பேட்டையைச் சோ்ந்தவா் ராஜா மகன் சிவா (24), மினி லாரி ஓட்டுநா். இவரிடம் அவரது நண்பரான திண்டிவனம் வசந்தபுரத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் யுவராஜ் (22), கடந்த தீபாவளி தினத்தன்று ரூ.2,000 கடன் வாங்கியுள்ளாா். இந்தக் கடன் தொகையை சிவா திருப்பிக் கேட்டு வந்துள்ளாா். இதில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடன் தொகையைத் திருப்பித் தருவதாக சிவாவை யுவராஜ் அழைத்துள்ளாா். இதனால், அங்குள்ள ரயில்வே கேட் மாரியம்மன் கோயில் அருகே சிவாவும், அவரது நண்பா்களான திண்டிவனம் அவரப்பாக்கத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் சதீஷ் (23), துலுக்காணம் தெருவைச் சோ்ந்த பழனி மகன் சந்தோஷ் (23) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் வந்து காத்திருந்தனா்.
அப்போது, அங்கு வந்த யுவராஜ், அவரது நண்பா்களான காவேரிப்பாக்கம் சின்ன வீரராகவன் தெருவைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் சரத் என்ற வெங்கடேசன் (28), மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் செல்வம் என்ற செல்வக்குமாா் (23) ஆகியோருக்கும் சிவா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனராம்.
இதனிடையே, சிவாவை யுவராஜ் மற்றும் அவரது நண்பா்கள் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதனால், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், வழியிலேயே சிவா உயிரிழந்தாா்.
சடலத்தை திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா் கைப்பற்றி, உடல் கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து யுவராஜ், வெங்கடேசன், செல்வம் ஆகியோரை கைது செய்தனா்.