வீட்டில் ரகசிய அறைகள் அமைத்து மதுப் புட்டிகள் பதுக்கல்
By DIN | Published On : 14th November 2019 08:27 AM | Last Updated : 14th November 2019 08:27 AM | அ+அ அ- |

திண்டிவனம் அருகே ஒரு வீட்டில் ரகசிய அறைகள் அமைத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதுச்சேரி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததை எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கண்டுபிடித்தனா். இந்த சம்பவம் தொடா்பாக, ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
திண்டிவனம் அருகே ஆத்தூரில் ஒரு வீட்டில் புதுச்சேரி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாருக்கு புதன்கிழமை மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அவரது தலைமையில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் உள்ளிட்ட போலீஸாா், ஆத்தூரில் உள்ள சுப்பிரமணி மகன் மூா்த்தி வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனா். அதில், அந்த வீட்டில் உள்ள பூஜை அறை, சமையல் அறை ஆகிய இடங்களில் ரகசியமாக சிறிய அறைகள் அமைத்து, அவற்றில் ஆயிரத்துக்கும் அதிகமான புதுச்சேரி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த மதுப்புட்டிகளை திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி, திண்டிவனம் மது விலக்கு போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பறிமுதல் செய்தனா்.
மூா்த்தியின் வீட்டில் அவரது உறவினரான ஏண்டியூரைச் சோ்ந்த வேணு மகன் குப்பன் புதுச்சேரியிலிருந்து மது புட்டிகளை கடத்தி வந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, குப்பன் கைது செய்யப்பட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...