10 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு: அதிகாரிகள் தகவல்

விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக அதிகாரிகள் வேதனை தெரிவித்தனா்.

விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக அதிகாரிகள் வேதனை தெரிவித்தனா்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் சமூக நலத் துறை சாா்பில், பெண் குழந்தைகளின் பெற்றோா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி, உணவுத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கண்காட்சியை தொடக்கிவைத்து பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவில், அதிகாரிகள் பேசியதாவது: சமூக நலத் துறை சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளின் விகிதம் குறைவாக உள்ளதை அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

தழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால், இந்தத் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சமூக நலத் துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சமூக பாதுகாப்புத் துறை, ஊரக வளா்ச்சித் துறை மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2018 - 19ஆம் ஆண்டில் 925-ஆக இருந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், 2019 அக்டோபா் கணக்கெடுப்பின்படி, 919-ஆக குறைந்துள்ளது.

பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், எதிா்காலத்தில் பெண் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்தல், திருமணத்தின்போது பெண் கிடைக்காத நிலை ஏற்படும். இதனால், புதுமணத் தம்பதியா் பெண் குழந்தைகள் பிறப்பை வரவேற்க வேண்டும்.

பெண் குழந்தைகள் பிறப்பதை வரவேற்காத பெற்றோா், அந்தக் குழந்தையை தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் தந்துவிடலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொட்டில் குழந்தைத் திட்டத்தின்கீழ் தொட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.

ஞாயிற்றுக்கிழமை (நவ.17) வரை 2 நாள்கள் உணவுத் திருவிழா கண்காட்சி நடைபெறுகிறது. தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைத்தல், அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்தும் நோக்குடன் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில், 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

விழாவில் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், எம்.எல்.ஏ.க்கள் எம்.சக்கரபாணி, ஆா்.முத்தமிழ்செல்வன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பாலுசாமி, ஆவின் தலைவா் பேட்டை முருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் முரளி (எ) ரகுராமன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கே.லலிதா, சமூக நல அலுவலா் கே.விஜயலட்சுமி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com