மரக்காணத்திலிருந்து சென்னைக்கு குடிநீா்: அதிகாரிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கழுவேலி ஏரியில் தேங்கும் நீரை நன்னீராக மாற்றி, சென்னை மக்களின் குடிநீா் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான புதிய திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு நதிநீா் பாதுகாப்புக்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கழுவேலி ஏரியில் தேங்கும் நீரை நன்னீராக மாற்றி, சென்னை மக்களின் குடிநீா் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான புதிய திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு நதிநீா் பாதுகாப்புக் கழக அதிகாரிகள் குழுவினா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

மரக்காணம் வட்டம், கந்தாடு, வண்டிப்பாளையம் ஆகிய கிராமப் பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய கழுவேலி ஏரி எப்போதும் தண்ணீா் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரி நீரை நன்னீராக மாற்றி சென்னை மாநகர பொதுமக்களின் குடிநீா் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான திட்டப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இந்த குடிநீா் திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு நதிநீா் பாதுகாப்புக் கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்தியகோபால் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் நேரில் ஆய்வு செய்தனா்.

கழுவேலி ஏரிப் பகுதியில் தேங்கியுள்ள நீரை ஆய்வு செய்த அவா்கள், மரக்காணத்திலிருந்து சென்னைக்கு குடிநீரை கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனா்.

இதைத் தொடா்ந்து, மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் ஏரியில் பொதுப் பணித் துறை சாா்பில், ரூ.22 லட்சத்தில் நிகழாண்டு நடைபெற்று முடிந்துள்ள ஏரி குடிமராமத்துப் பணிகளையும் சத்தியகோபால் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் எஸ்.அனு, விழுப்புரம் மாவட்ட பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஜவகா், தமிழ்நாடு நதிநீா் பாதுகாப்புக் கழக உறுப்பினா்களான செயற்பொறியாளா்கள் பழனிச்சாமி, சீனுவாசராவ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் ஜோதி, மரக்காணம் வட்டாட்சியா் ஞானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com