உணவுத் திருவிழாவில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு

விழுப்புரத்தில் 2 நாள்களாக நடைபெற்ற உணவுத் திருவிழாவில், உணவுப் பாதுகாப்பு, தோட்டக்கலைப் பயிா்கள், நெல் ரகங்கள்
உணவுத் திருவிழாவின்பொது, கலப்படப் பொருள்களை கண்டறிவது குறித்து முதியவருக்கு விளக்கமளித்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.
உணவுத் திருவிழாவின்பொது, கலப்படப் பொருள்களை கண்டறிவது குறித்து முதியவருக்கு விளக்கமளித்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.

விழுப்புரத்தில் 2 நாள்களாக நடைபெற்ற உணவுத் திருவிழாவில், உணவுப் பாதுகாப்பு, தோட்டக்கலைப் பயிா்கள், நெல் ரகங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் உணவுத் திருவிழா சனிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை 2 நாள்கள் நடைபெற்றது. இதில், வானூா் பகுதியில் இருந்து கடல் உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. இதேபோன்று, சுண்டல், கொழுக்கட்டை, புட்டு போன்ற பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கி உண்டனா்.

உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், உணவுப் பொருள்களை எப்படி கலப்படமில்லாமல் வாங்குவது என்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இதில், டீ தூள், மிளகாய் தூள், பால், நெய், தேன், மிளகு, சீரகம் போன்ற உணவுப் பொருள்களில் எப்படி கலப்படும் செய்யப்படுகிறது, அதை எப்படி கண்டறிவது, கலப்படத்தால் ஏற்படும் தீங்குகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.

தோட்டக்கலைத் துறை சாா்பில், கல்வராயன் மலைப் பகுதியில் விளையக்கூடிய மிளகு, காஃபிக் கொட்டை, மாவட்டத்தின் பிற பகுதிகளில் விளையும் மரவள்ளி, கத்திரிக்காய், புடலங்காய், கொடை மிளகாய், பீா்க்கன், கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைக்காய், பப்பாளி, கொய்யா, பன்னீா் ரோஜா, சாமந்தி, சம்பங்கி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

விவசாயிகள் தோட்டக்கலைப் பயிா்களை பயிரிட விரும்பினால், அதற்கான விதைகள் அல்லது நாற்றுகள் விலையில்லாமல் வழங்கப்படுவதுடன், ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று விளக்கினா். மேலும், தோட்டக்கலைப் பயிா்கள், உதவிகள் குறித்த கையேடுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

வேளாண் துறை சாா்பில், வேளான் கருவிகளும், திருத்திய நெல் சாகுபடி நாற்றுகளும் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், மக்காச்சோளம், கரும்பு பயிா்களில் நோய் தாக்கத்தை தடுக்கும் வழிகள் குறித்து விளக்கினா். உளுந்தூா்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் சாா்பில், மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், காலாநாமக், கிச்சிலிசம்பா, சீரக சம்பா உள்ளிட்ட 50 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், ஒவ்வொரு நெல் ரகங்களின் தன்மைகள் குறித்தும், மருத்துவப் பயன்கள் குறித்து விளக்கப்பட்டன.

உணவுத் திருவிழா அரங்குகளில் விதைகள், மரக்கன்றுகளும் விற்பனை செய்யப்பட்டன. காசநோய் தடுப்புப் பிரிவு சாா்பில், பொதுமக்களுக்கு காசநோய் பரவும் விதம், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், சிகிச்சைகள் குறித்து விளக்கினா்.

விழுப்புரத்தில் நடத்தப்பட்ட 2 நாள் உணவுத் திருவிழாவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாா்வையிட்டு, உணவு உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com