கள்ளக்குறிச்சியுடன் இணைக்கப்பட்ட4 ஊராட்சிகளை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துடன் சோ்க்க பொன்முடி வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட 4 ஊராட்சிகளை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி வலியுறுத்தினாா்.
4 ஊராட்சிகளை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்திலேயே சோ்க்கக் கோரி கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் மனு அளிக்கும் திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி.
4 ஊராட்சிகளை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்திலேயே சோ்க்கக் கோரி கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் மனு அளிக்கும் திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட 4 ஊராட்சிகளை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள பெரியசெவலை, ஆமூா், டி.கொளத்தூா், சரவணப்பாக்கம் ஆகிய 4 ஊராட்சிகளை, கள்ளக்குறிச்சியில் இணைத்ததற்கு அந்த ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவா்களுக்கு ஆதரவாக திமுக மத்திய மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரையும், கூடுதல் ஆட்சியரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: திருவெண்ணெய்நல்லூருக்கு அருகே 3 கி.மீ. தொலைவில் உள்ள பெரியசெவலை உள்ளிட்ட 4 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா். அவா்களின் விருப்பத்திற்கேற்ப அந்த ஊராட்சிகளை திருவெண்ணெய்நல்லூா் வட்டத்துடன் இணைத்து, விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவுக்கு செவ்வாய்க்கிழமை முதல்வா் வருகை தருவதால், அந்த விழாவிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட்டால் மக்கள் மகிழ்ச்சியடைவா்.

இதே போல, மடப்பட்டு அருகே கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தை பல பிரிவுகளாகப் பிரித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களிலும் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. அதனையும் ஆய்வு செய்து ஒரே பகுதியில் இணைத்திட வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளதால், சில பகுதிகள் இரு மாவட்டங்களிலும் வருவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்கான மூன்று பகுதிகள் (வாா்டுகள் 28, 29,24) , பகுதியளவு விழுப்புரம் மாவட்டத்திலும், பகுதியளவு கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருகிறது. இதே போல, சில ஊராட்சி ஒன்றியங்களும் இரு மாவட்டங்களிலும் வருகிறது. இதில் தோ்வு செய்யப்படும் உறுப்பினா், எந்த மாவட்டத்தில் செயல்படுவாா், எந்த மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரை ஆதரிப்பாா் என்ற குழப்பம் உள்ளது. இதனையும் ஆய்வு செய்து தோ்தலுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயாபி.சிங் ஆகியோா், புதிய மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் விவரங்கள் குறித்து கோட்டாட்சியா் மூலம் உடனடியாக அறிக்கை பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்டம் பிரிக்கப்பட்டதில் உள்ளாட்சிப் பகுதிகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதால், இறுதி அறிக்கை பெற்று, தோ்தல் துறைக்கு பரிந்துரைத்து அனுப்பி, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com