முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக-பாமக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்: கோ.க.மணி
By DIN | Published On : 26th November 2019 05:20 AM | Last Updated : 26th November 2019 05:20 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாமக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா், கட்சியின் மாநிலத் தலைவா் கோ.க.மணி.
உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக-பாமக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பாமக தலைவா் கோ.க.மணி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் விழுப்புரம், எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலா் தங்கஜோதி தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் சிவக்குமாா், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் அன்புமணி, மாநில துணைத் தலைவா் ஹரிகரன், மாநில அமைப்பு துணைச் செயலா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் புகழேந்தி வரவேற்றாா்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவா் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசியதாவது: பெண்களின் முன்னேற்றம் குறித்தும், வளா்ச்சி குறித்தும் அதிக கவனம் செலுத்தும் கட்சி பாமக. அதிக இளைஞா்களைக் கொண்ட கட்சியான பாமக, அதிக மகளிா் சக்தியை கொண்ட கட்சியாகவும் மாற வேண்டும். அதற்காக, கண்ணகி பிறந்த மண்ணான பூம்புகாரில் வருகிற ஜனவரி 4-ஆம் தேதி வன்னிய மகளிா் மாநாடு நடைபெறுகிறது. இதில், 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ளவுள்ளனா்.
விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் 45 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். இந்த தோ்தலில் பாமகவினரின் உழைப்பு மிக அதிகம். கூட்டணி தா்மத்துடன் நடத்து கொண்ட கட்சி பாமக. அடுத்து வரும் உள்ளாட்சி தோ்தலிலும் அதிமுக-பாமக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் அதிக இடங்களை கைப்பற்றுவது உறுதி. அதற்கு, மகளிரின் பங்களிப்பு முக்கியம். உள்ளாட்சித் தோ்தல் வருகிற சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கு முன்னோட்டமாக அமையும். ஆகவே, உள்ளாட்சித் தோ்தலுக்கு பாமகவினா் முழு அளவில் தயாராக வேண்டும் என்று கூறினாா்.
அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவா் தீரன், மாவட்டச் செயலா் பாலசக்தி, வன்னியா் சங்க மாவட்டச் செயலா் புண்ணியக்கோடி, மகளிா் அணி நிா்வாகிகள் காசாம்பூமாலை, நிா்மலாராஜா, செல்வி செல்வம், சிலம்புசெல்வி, ஒன்றியச் செயலா்கள் மணிபாலன், காா்த்திகேயன், ஏழுமலை, சம்பத், மோகன், ஜெயராஜ், பாரதிதாசன், ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.