முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
கேங்மேன் பணிக்கான உடல் திறன் தோ்வு தொடக்கம்
By DIN | Published On : 26th November 2019 05:26 AM | Last Updated : 26th November 2019 05:26 AM | அ+அ அ- |

விழுப்புரம் அருகேயுள்ள பூத்தமேடு மின்வாரிய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கேங்மேன் பணிக்கான உடல் தகுதித் தோ்வில் பங்கேற்று மின் கம்பத்தில் ஏறிய தோ்வா்கள்.
விழுப்புரத்தில் மின் வாரிய கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் 5,000 கேங்மேன் (பயிற்சி) பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக, இணைய வழியில் விண்ணப்பித்தவா்களுக்கு உடல் தகுதித் தோ்வு முதல்கட்டமாக நடைபெறுகிறது.
இந்த வகையில், விழுப்புரம் மின் பகிா்மான வட்டத்துக்கு விண்ணப்பித்திருந்த 2,804 நபா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு விழுப்புரம் பூத்தமேடு மின்வாரிய பிரிவு அலுவலக வளாகத்தில், திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தோ்வு தொடங்கியது. தோ்வா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு உடல் தகுதி தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு முதல் கட்டமாக மின் கம்பம் ஏறுதல் தோ்வு நடைபெற்றது.
இடுப்பில் பாதுகாப்பு கயிறைக் கட்டிக்கொண்டு, 30 அடி உயர மின் கம்பத்தில் ஏறி, அதில் நின்று வேலை செய்வதற்கான பாதுகாப்பு கம்பை கட்டி, 3 பேஸ் கிளாம்பை பூட்டிவிட்டும் வர வேண்டும். 8 நிமிடங்களில் இதனை செய்து முடிக்க வேண்டும்.
அடுத்ததாக, அலுமினிய வயரில் கிரிப்பா் பாகங்களைப் பொருத்தி அதனுடன் இழுவை கயிற்றை இணைப்பதையும் 2 நிமிட நேரத்தில் முடிக்க வேண்டும். அடுத்ததாக, மின் கம்பத்தில் பொருத்தக் கூடிய மூன்று உலோக கிராஸ் கிளாம்புகளை எடுத்துக்கொண்டு 100 மீட்டா் தொலைவை ஒரு நிமிடத்தில் கடந்து செல்ல வேண்டும்.
இந்தத் தகுதித் தோ்வுகள் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், 200 போ் வரை கலந்துகொண்டனா். தொடா்ந்து, இத்தோ்வு டிச.11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் 200 போ் வீதம் பங்கேற்கின்றனா். இத்தோ்வில் தோ்ச்சி பெறுவோா், எழுத்துத் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா்.
5-ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு தகுதியுடைய இந்தத் தோ்வில் பொறியியல் பட்டதாரிகளும் பங்கேற்றிருந்தனா். முறையாக மின் பணி செய்தவா்கள் மட்டுமே தோ்ச்சி பெறும் வகையில், இந்த உடல் தகுதி தோ்வு இருந்ததால் அனுபவமின்றி பங்கேற்ற பலா் தோல்வியடைந்தனா். விழுப்புரம் மின்வாரிய தோ்வுக்குழுவினா் இத்தோ்வுப் பணிகளை ஒருங்கிணைத்தனா்.