கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு
By DIN | Published on : 28th November 2019 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற கிரண் குராலாவுக்கு வாழ்த்து தெரிவித்த சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட கிரண் குராலா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தனி அதிகாரியாக கிரண் குராலாவை, கடந்த ஜூலை மாதம் அரசு நியமித்தது. அவா் ஜூலை 25-ஆம் தேதி கள்ளக்குறிச்சிக்கு வந்து பணிகளைத் தொடங்கினாா். இதையடுத்து, கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட எல்லைகள் வரையறுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தனி அதிகாரியான கிரண் குராலா மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழா கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா செவ்வாய்க்கிழமை மாலை பொறுப்பேற்றாா். அவருக்கு கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்கவுள்ள சங்கீதா மற்றும் வட்டாட்சியா்கள் உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.