Enable Javscript for better performance
உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாக்குறுதிகள்!  விக்கிரவாண்டி  மக்கள் எதிர்பார்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாக்குறுதிகள்!  விக்கிரவாண்டி  மக்கள் எதிர்பார்ப்பு

    By இல.அன்பரசு  |   Published on : 07th October 2019 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விக்கிரவாண்டி தொகுதியில் நீண்ட கால பிரச்னைகள், கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சியினர் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    மொத்தம் 103 ஊராட்சிகளைக் கொண்டது விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி. முற்றிலும் கிராமங்களை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். ஆனால், விவசாய சாகுபடி படிப்படியாகக் குறைந்ததையடுத்து, இப்பகுதியில் பரவலாக இருந்த அரிசி ஆலைகளின் எண்ணிக்கையும் குறைந்து போனது. 
    விக்கிரவாண்டி பகுதியில் ஒரு ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி உள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில் தான், விழுப்புரம் வட்டத்திலிருந்து பிரித்து, விக்கிரவாண்டி வட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. அதேபோல, அரசுக் கல்லூரிகள்,  தொழிற்பயிற்சி நிலையங்களும் இல்லை.
    தடுப்பணை தேவை: விக்கிரவாண்டி-காணை ஒன்றியங்கள் வழியாகச் செல்லும் பம்பை ஆற்றின் குறுக்கே, கப்பியாம்புலியூர் பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தடுப்பணை அமைத்தால், சுற்றுப்பகுதியில் உள்ள 50 கிராமங்களில் விவசாயம் மேம்படும்.  குடிநீர் ஆதாரமும் உயரும். ஆனால், தடுப்பணை குறித்து ஆய்வு செய்ததுடன், அந்த கோரிக்கை கிடப்பில் உள்ளது.
    தீயணைப்பு நிலையம் இல்லை: குடிசைகள் நிறைந்த விக்கிரவாண்டி பகுதி அதிக தீ விபத்துகளை எதிர்கொள்கிறது. 
    தீ விபத்து நேரிடும் போது, விழுப்புரத்திலிருந்து 15 கி.மீ. முதல் 20 கி.மீ. தொலைவிலிருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் சேத அளவு அதிகமாகி, உயிரிழப்பும் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, விக்கிரவாண்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது.
    தொழிற்சாலைகள் வேண்டும்: இந்தத் தொகுதியில் உள்ள விளைநிலங்களில் பெரும்பாலானவை மானாவாரி. மழைக் காலங்களில் மட்டுமே ஒரு போக விவசாயம் நடைபெறுகிறது. 
    பிறகு, விளைநிலங்கள் வறட்சியாகி விடுவதால், இங்குள்ள விவசாயிகள், இளைஞர்கள் வாழ்வாதாரத்தைத் தேடி, சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை தொடர்கிறது. ஆகவே, விக்கிரவாண்டியில் ஒரு கனரக தொழிற்சாலையை உருவாக்கி,  வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் இயங்க உதவியாக இருக்கும் என்பதும் இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
    பேருந்து வசதி இல்லாத கிராமங்கள்: விக்கிரவாண்டி பகுதியிலிருந்து அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை. குறிப்பாக, சித்தலாம்பட்டு, கஞ்சனூர், அன்னியூர் குறுவட்டங்களிலிருந்து மக்கள் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் வந்து செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை. ஆகவே, விக்கிரவாண்டியை மையப்படுத்தி,  தேவையான ஊர்களுக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்.
    மேம்பாலம் அவசியம்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலையில் வாகனங்கள், பொது மக்கள் வர வேண்டும். 
    அவ்வாறு சாலையை கடக்கும் போது, தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு மேம்பாலம் அமைக்க கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். 
    புறக்கணிக்கும் புறநகர் பேருந்துகள்: சென்னை, விழுப்புரம், கும்பகோணம் வழித்தட புறநகர் பேருந்துகள் விக்கிரவாண்டியில் நிற்பதும் இல்லை, உள்ளே வந்து செல்வதும் இல்லை. இதனால், இப்பகுதியினர் விழுப்புரம் சென்றே அந்தப் பேருந்துகளில் பயணிக்க வேண்டி உள்ளது. 
    வட்ட அந்தஸ்து பெற்றுள்ள விக்கிரவாண்டியில் புறநகர் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும்.
    விக்கிரவாண்டி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீராத பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 
    அதனை நிரந்தரமாகப் போக்க தீர்வு காணப்பட வேண்டும். இந்தத் தொகுதியை ஒட்டியுள்ள வீடுர் அணையை சீரமைத்தும், அங்குள்ள சுற்றுலா மையத்தை புதுப்பித்தும் பொழுதுபோக்கு அம்சத்துக்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொகுதி மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
    வாக்குறுதி அளிக்காத கட்சிகள்: விக்கிரவாண்டியில் இடைத் தேர்தல் நடைபெறும் சூழலில்,  மாநில அளவிலான பிரச்னைகள்,  தேவைகளை பேசி வரும் அரசியல் கட்சியினர்,  தொகுதியில் உள்ள பிரச்னைகளை தீர்க்க முன்வர வேண்டும், அதற்கான வாக்குறுதிகளை முன்வைக்க வேண்டும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai