அதிமுக அரசுக்கு மக்கள் வலு சேர்க்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வரும் அதிமுக அரசை மேலும் வலுப்படுத்தும்

தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வரும் அதிமுக அரசை மேலும் வலுப்படுத்தும் வகையில் இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலையொட்டி, காணை ஒன்றியம் அன்னியூரில் செவ்வாய்க்கிழமை அதிமுக வேட்பாளர் ஆர்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழக அமைச்சர்கள் உங்கள் பகுதிகளில் முகாமிட்டு பிரசாரம் செய்கின்றனர். உங்கள் பகுதி குறைகளை நன்கு அறிந்து, நிவர்த்தி செய்ய இந்த பிரசாரம் உதவும். நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு மேலும் வலு சேர்க்க ஏதுவாக, இந்த இடைத் தேர்தலிலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இந்தப் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும். 
அதன் மூலம் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, 12 குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டு, நீர் சேமிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஞ்சனூர் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்றார் செங்கோட்டையன்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளில் (எல்.கே.ஜி, யூ.கே.ஜி.) தமிழ், ஆங்கில மொழிகளில் கல்வி பயிற்றுவிக்கப்படும். தற்போது, 2 லட்சம் மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர். விஜயதசமி சிறப்பு சேர்க்கையின் போது, கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்கள் வரை சேருவர் என எதிர்பார்க்கிறோம்.
அரசுப் பள்ளிகளில் 6 மாதங்களுக்குள் கணினி, பொலிவுறு வகுப்பறைகள் என அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும். மாணவர்களுக்கு உறையுடன் கூடிய காலணி (ஷூ) உள்ளிட்டவையும் வழங்கப்படும். 
இதனால், அரசுப் பள்ளிகள் மீதான மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
தொடர்ந்து, அவர் கஞ்சனூர், கொரலூர், மேல்காரணை, சாலவனூர், கல்யாணம்பூண்டி, சிறுவாலை உள்ளிட்ட கிராமங்களில் மாலை வரை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அமைச்சர் கருப்பண்ணன்,  பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தங்கஜோதி, தேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர்,   உடனிருந்தனர்.
வயல்வெளியில் நடந்து சென்ற அமைச்சர்: பிரசாரம் முடிந்து ஊருக்கு வெளியே வந்த அமைச்சர் செங்கோட்டையன், அன்னியூர் கிராம வயல்வெளிச் சாலையில் இறங்கி நீண்ட தொலைவு நடந்து சென்றார். அப்போது, ஆடு, மாடுகள் மேய்த்துவிட்டும், விவசாயப் பணி முடிந்தும் திரும்பிக் கொண்டிருந்த பெண்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்களிடம் அரசின் விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கப்பட்டதா என அவர் விசாரித்தார். அப்போது,  ஒரு சிலருக்குதான் வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு வழங்கவில்லை என்றனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தில் ஏற்கெனவே ஒரு கிராமத்துக்கு அதிகபட்சமாக 65 பேர் வரை தேர்வு செய்து வழங்கப்பட்டது. தற்போது அவை மாற்றப்பட்டு, கிராமத்தில் அந்தத் திட்ட விதிகளுக்கு உள்பட்ட அனைத்து ஏழை மக்களுக்கும் வழங்கப்படவுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com