செஞ்சி அருகே வட்டெழுத்துகளுடன் தொன்மையான துர்க்கை சிற்பம்!

செஞ்சி அருகே செவலப்புரை கிராமத்தில் வட்டெழுத்துக்களுடன் கூடிய தொன்மையான துர்க்கை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. 
செஞ்சி அருகே வட்டெழுத்துகளுடன் தொன்மையான துர்க்கை சிற்பம்!

செஞ்சி அருகே செவலப்புரை கிராமத்தில் வட்டெழுத்துக்களுடன் கூடிய தொன்மையான துர்க்கை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. 
செவலப்புரை கிராமத்தில் அண்மையில் இதனை சிற்பத்தைக் கண்டறிந்து கள ஆய்வு செய்த, விழுப்புரம் அரசு கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர்கள் ரமேஷ்,  ரங்கநாதன்,  ஸ்ரீதர் ஆகியோர் கூறியதாவது:  
தமிழகத்தில் கல்வெட்டுகளுடன் கூடிய துர்க்கை சிற்பங்கள் சில இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், துர்க்கை சிற்பத்தின் கீழ் பகுதியில் ஆய்வு செய்தபோது, இரு வரிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. 
195 செ.மீ உயரமும், 63 செ.மீ. அகலமும் கொண்ட இந்த சிற்பத்தில் மகிஷனின் தலை மீது, எட்டு கரங்களுடன் நின்ற கோலத்தில் துர்க்கை காணப்படுகிறார். பின்புறம், உயரமாக, நீண்ட கொம்புகளுடன் கூடிய கலைமான் வாகனம் உள்ளது. 
மானின் தலையானது, துர்க்கையின் தலைக்கு இணையாக காணப்படுவது அரிய கலைப்படைப்பாகும். 
துர்க்கையின் கரங்களில் பிரயோக சக்கரமும், நீண்ட வாளும், கேடயமும், சங்கும், வில்லும் தெரிகிறது.  துர்க்கை என்னும் கொற்றவைக்கு எண்தோளி என்றொரு பெயரும் உண்டு.  அதற்கு எட்டு தோள்களை உடையவள் என்று பொருள். 
துர்க்கையின் தலையில் கரண்ட மகுடமும், துர்க்கையின் பாதத்தின் கீழே மகிஷனின் தலைக்கு வலது கீழ்புறமாக, அடியவர் ஒருவர் அமர்ந்து வணங்குவது போன்றும் உள்ளன.  இடது புறமாக அடியவர் ஒருவர் நின்ற நிலையில், துர்க்கையை போற்றுவது போன்று அமைந்துள்ளது.
இத்துர்க்கை சிற்பம் கிராமிய கலையமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. துர்க்கையின் கீழ்ப்பகுதியில்,  இரண்டு வரிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.  வெண்குன்றம் என்னும் கோட்டத்தில், நன்பேடு என்னும் ஊர் அமைந்ததையும், அவ்வூரைச் சார்ந்த, யாரோ ஒருவர் இந்த துர்க்கை சிற்பத்தை செய்து கொடுத்ததைப் பற்றியும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.  
தமிழி, தமிழ்-பிராமி என்று அறியப்படும், மிகத்தொன்மையான தமிழ் எழுத்திலிருந்து வட்டெழுத்து உருவானது. அரச்சலூர், பூலாங்குறிச்சி, இருளப்பட்டி ஆகிய இடங்களில் வட்டெழுத்து கல்வெட்டுகளை காணமுடிகிறது. 
அதே எழுத்தமைதியில் இத்துர்க்கையின் வட்டெழுத்துக் கல்வெட்டும் இருப்பதால் இந்த சிற்பம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு எனவும், இது பல்லவர் காலத்தின் தொடக்கமாக இருக்கலாமெனவும் கல்வெட்டு ஆய்வாளர் சு.இராசகோபால் குறிப்பிடுகிறார்.  தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட, எழுத்துப்பொறிப்புகளுடன் கூடிய துர்க்கை சிற்பங்களில்,  இது மிகவும் தொன்மையானது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com