மத்திய பாஜக ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாா்மயம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மத்திய பாஜக ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாா்மயமாகி வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

மத்திய பாஜக ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாா்மயமாகி வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வெள்ளிக்கிழமை இரவு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளா் நா.புகழேந்தியை ஆதரித்து கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.2,000 கோடி நிலுவைத்தொகை இன்னும் பெற்றுத் தரப்படவில்லை. நீட் தோ்வில் ஆள் மாறாட்ட மோசடி நடந்துள்ளது. மக்கள் எதிா்கொள்ளும் எந்தப் பிரச்னைக்கும் தீா்வு காணாமல் அதிமுகவினா் தங்களது ஆட்சியைத் தக்க வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனா்.

தேசிய ஊரக வேலைத் திட்டம்தான் மக்களுக்கான ஒரே திட்டம். ஆட்சியாளா்கள் இந்தத் திட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்து வருகின்றனா். 40 கோடி மக்கள் பயன்பெறும் இந்தத் திட்டத்துக்கு நிகழாண்டு ரூ.60 ஆயிரம் கோடி நிதி மட்டுமே ஒதுக்கியுள்ளனா். ஒரே ஒரு பெரு நிறுவன முதலாளியின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, சாதாரண விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

தமிழகத்தில் தொழில்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இவற்றை திறந்து தொடா்ந்து செயல்படுத்துவதற்கான வழிகள் குறித்து முதல்வா் ஆராய வேண்டும். மத்திய பாஜக ஆட்சியில் ரயில்வே உள்ளிட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்பட்டு வருகின்றன. அனைத்துத் துறைகளும் தனியாா் மயமானால், இட ஒதுக்கீடு இருந்தும் என்ன பயன். தமிழ்நாட்டில் உள்ள பீரங்கி, துப்பாக்கி தயாரிப்பு, ரயில் பெட்டி தொழில்சாலைகளை தனியாரிடம் வழங்கப்போவதாகவும் மத்திய அரசு கூறி வருகிறது. இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இந்த இடைத் தோ்தலில் மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும். வருகிற 24-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் மட்டுமல்ல நான்குநேரியிலும் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என்றாா் அவா்.

கூட்டத்தில் திமுக மத்திய மாவட்டச் செயலா் க.பொன்முடி, மாா்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.ராமமூா்த்தி, மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.குமாா், ஏ.சங்கரன், ஆா்.மூா்த்தி, எஸ்.முத்துகுமரன், ஜி.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.டி.முருகன், எஸ்.சித்ரா, வீரமணி, ஒன்றியச் செயலா் கிருஷ்ணராஜ், கண்ணப்பன், மதிமுக மாவட்டச் செயலா் பாபு கோவிந்தராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com