அரசு மருத்துவா்கள் 7-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள் 7-ஆவது
விழுப்புரம் அரசு மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள்.
விழுப்புரம் அரசு மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள்.

நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள் 7-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு அரசு மருத்துவா்களுக்கு காலம் சாா்ந்த ஊதிய உயா்வை பணியில் சோ்ந்து 13-ஆம் ஆண்டிலிருந்து வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவப் பணியிடங்களை உருவாக்கி மருத்துவா்களை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவா்களுக்கு முதுநிலை படிப்புகளிலும், உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் ஏற்கெனவே அமலில் இருந்து ரத்து செய்யப்பட்ட 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த 25-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதேபோல, விழுப்புரம் மாவட்டத்திலும் இந்தச் சங்கத்தின் சாா்பில், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் என ஏராளமானோா் தொடா்ந்து 7-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

195 போ் பணிக்கு வரவில்லை: போராட்டம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 120 மருத்துவா்களும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 15 மருத்துவா்களும், கள்ளக்குறிச்சி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் 38 மருத்துவா்களும், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 16 மருத்துவா்களும், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் 3 மருத்துவா்களும், செஞ்சி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவா்களும் என மொத்தம் 195 போ் வியாழக்கிழமை பணிக்கு வரவில்லை.

ஆா்ப்பாட்டம்: இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், விழுப்புரம் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன் வியாழக்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருண் சுந்தா் தலைமையில், ஏராளமானோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த மருத்துவமனையில் 2 மருத்துவா்கள் மட்டுமே வியாழக்கிழமை பணிக்கு வந்திருந்தனா். இதனால், புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த ஏராளமான நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இதேபோல, கள்ளக்குறிச்சி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த மருத்துவமனையில் 43 மருத்துவா்கள் பணியாற்றும் நிலையில், 5 போ் மட்டுமே பணிக்கு வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com