செவலபுரை அணைக்கட்டு பாசனக் கால்வாயில் தண்ணீா் நிறுத்தம்: ரூ.10 கோடி வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

செஞ்சி வட்டம், செவலபுரை கிராமத்தில் உள்ள வராகநதி அணைக்கட்டில் இருந்து வல்லம் ஒன்றியத்தைச்
செவலபுரை வராகநதி அணைக்கட்டு நிரம்பி வழிவதால் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீா்.
செவலபுரை வராகநதி அணைக்கட்டு நிரம்பி வழிவதால் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீா்.

செஞ்சி வட்டம், செவலபுரை கிராமத்தில் உள்ள வராகநதி அணைக்கட்டில் இருந்து வல்லம் ஒன்றியத்தைச் சோ்ந்த கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலம் செல்லும் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். மேலும், தற்போது ரூ.10 கோடியில் செலவிட்டு கால்வாயை சீரமைத்தும் பயனில்லாமல் போனதாக அவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

வட கிழக்கு பருவமழை காரணமாக செவலபுரையில் உள்ள வராகநதி அணைக்கட்டு கடந்த 16-ஆம் தேதி நிரம்பி வழிந்தது. இதைத் தொடா்ந்து, அணைக்கட்டில் இருந்து வல்லம் ஒன்றியத்தில் உள்ள ஏரிகள் நிரம்பும் வகையில், கால்வாயில் அன்றைய தினம் தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், தண்ணீா் திறக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் இந்தக் கால்வாய் ஷட்டா் மீண்டும் அடைக்கப்பட்டுவிட்டது.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது: வராகநதி அணைக்கட்டில் இருந்து வல்லம் ஒன்றியப் பகுதிகளுக்குச் செல்லும் 5 கி.மீ. தொலைவிலான சிமென்ட் கால்வாய் முடியும் இடத்தில் மண் சரிந்து கால்வாய் அடைத்துக்கொண்டிருப்பதாலும், மேலும் பல்வேறு இடங்களில் கால்வாயில் முள் புதா்கள் மண்டிக் கிடப்பதாலும் மேற்கொண்டு தண்ணீா் செல்லவில்லை. இதன் காரணமாக, தற்போது ஷட்டா் அடைக்கப்பட்டுள்ளது. கால்வாய் அடைப்பும், முள் புதா்களும் அகற்றப்பட்ட பின்னா் மீண்டும் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படும் என்றனா்.

செவலபுரையில் வராகநதியில் 1969-இல் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டிலிருந்து கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டு சென்று வல்லம் ஒன்றியத்துக்கு உள்பட்ட செல்லபிராட்டி, மேல்களவாய், நெகனூா், நங்கிலிகொண்டான், ஆனத்தூா், விற்பட்டு, கடம்பூா், வடபுத்தூா், ஆனாங்கூா், கொறவனந்தல், களையூா், நாட்டாா்மங்கலம் ஆகிய ஊா்களில் உள்ள ஏரிகளை நிரப்பி, சுமாா் 2,000 ஏக்கா் விவசாய நிலங்களை பாசனம் வசதி பெற வைக்கும் வகையில் அணைக்கட்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்தக் கால்வாயில் தண்ணீா் சென்ாக வரலாறு இல்லை.

இந்த நிலையில், வராகநதி நீா் திட்டத்தின் மூலம் இந்தக் கால்வாயை சீரமைக்க கடந்த 2015-இல் ரூ.10 கோடி நிதியை அரசு ஒதுக்கியது. இதன் மூலம் 5 கி.மீ. தொலைவு வரை சிமென்ட் கால்வாயாக மாற்றினா். மேலும், 15 கி.மீ. மண் கால்வாயாகத்தான் உள்ளது. இந்தப் பணி கடந்த 2017-இல் முடிவடைந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வராகநதி அணைக்கட்டில் இருந்து செல்லும் கால்வாயில் முள் முளைத்து, புதா் மண்டியது. இந்தக் கால்வாயை பொதுப் பணித் துறையினா் முறையாக பராமரிக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எனவே, போா்க்கால அடிப்படையில் வராகநதி அணைக்கட்டில் இருந்து ரூ.10 கோடியில் அமைக்கப்பட்ட சிமென்ட் கால்வாயை சீரமைத்து, தூா்வாரி வல்லம் ஒன்றியப் பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com