மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரே அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்ததால், அவரை போலீஸார் சனிக்கிழமை கைது

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரே அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்ததால், அவரை போலீஸார் சனிக்கிழமை கைது  செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜி மகன் மணிகண்டன் (32). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தவமணிக்கும் (24) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், வீட்டிலிருந்த இருவருக்கும் இடையே வியாழக்கிழமை இரவு வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாலை தவமணி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த தவமணியின் உறவினர்கள், பெற்றோர் சந்தேகத்தின்பேரில், எடைக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று தவமணியின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவரது கணவர் மணிகண்டன், உடல்கூறு பரிசோதனைக்காக தவமணியின் சடலத்தை அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், மணிகண்டனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதை தவமணி கண்டித்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், மணிகண்டன் தான் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு தவணைத் தொகை செலுத்துவதற்காக, தவமணியை அவரது பெற்றோரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் வாங்கி வரும்படி மிரட்டி வந்துள்ளார். இதனால், வியாழக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன், தவமணியை கடுமையாகத் தாக்கி, சுவற்றில் மோதியதால், அவர் உயிரிழந்தார். அச்சமடைந்த மணிகண்டன், தவமணியின் சடலத்தை தூக்கில் போட்டுவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.
இதுகுறித்து தவமணியின் தாய் ராணி அளித்த புகாரின்பேரில், எடைக்கல் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை சனிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com