மானிய விலையில் இயந்திரங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நிகழ் (2019 -20) நிதியாண்டில் ரூ.16 கோடியில் வழங்கப்படவுள்ள வேளாண் இயந்திரங்களைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நிகழ் (2019 -20) நிதியாண்டில் ரூ.16 கோடியில் வழங்கப்படவுள்ள வேளாண் இயந்திரங்களைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 8 குதிரைத் திறன் முதல் 70 குதிரைத் திறன் சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் இயந்திரம், சுழல் கலப்பை, விசைக் களையெடுப்பான், விதை விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டைவெட்டும் கருவி உள்ளிட்டவற்றை விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கிப் பயன்பெறலாம்.
இதற்கு மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி, அரசு மானியம் வழங்கப்படும். சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு வரையும், இதர விவசாயிகளுக்கு 40 விழுக்காடு வரையும் மானியம் வழங்கப்படும்.
வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ், தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக, 216 டிராக்டர்கள்,  152 பவர் டில்லர்கள், 17 நாற்று நடும் கருவிகள் மற்றும் 181 இதர வேளாண் இயந்திரங்கள் வாங்கிக்கொள்ள நடப்பாண்டில் ரூ.1,095 லட்சமும், 57 வாகன வாடகை மையங்கள் அமைக்க ரூ.506 லட்சமும் விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள், அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்றிட ஏதுவாக, 25 வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க நிகழாண்டுக்கு ரூ.250 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, விவசாயிகள், விவசாயக் குழுக்கள் அல்லது தொழில் முனைவோர் பயனாளிகள் ஆவர்.
இவ்வாறாக, ரூ.25 லட்சத்திலான வாடகை மையங்கள் அமைக்க, 40 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் 32 மையங்கள் அமைக்க ரூ.256 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பண்ணை சக்தி குறைவாக உள்ள கிராமங்களில் குறைந்தபட்சம் 8 உறுப்பினர்களைக் கொண்ட விவசாயக் குழுக்கள் மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு குறையாத மதிப்புடைய பண்ணை இயந்திரங்களை வாங்கி, வாடகை மையங்களை நடத்தலாம். இதற்கு 80 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.
மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு, விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவு செய்து, பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com