சின்னசேலத்தில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம்: தலைமைச் செயலர் தகவல்

தமிழகத்தில் முதல்முறையாக விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பில், சர்வதேச தரத்தில்

தமிழகத்தில் முதல்முறையாக விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பில், சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக 
தலைமைச் செயலர் கே.சண்முகம் தெரிவித்தார்.
சின்னசேலத்தில் உள்ள ஆட்டுப்பண்ணையில் தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் தலைமைச் செயலர் கூறியதாவது:
சின்னசேலம் ஆட்டுப்பண்ணையில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையம் உலகத் தரம் வாய்ந்ததாக அமைய வேண்டுமென்று தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். உயர் கல்வி ஆராய்ச்சிக்கும், நாட்டு மாடுகள், ஆடுகளை பாதுகாக்கும் வகையிலும் 1,000 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆராய்ச்சி மையம் அமையவுள்ளது.
இந்த மையம் நான்கு பகுதிகளாக கட்டமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக நாட்டு மாடுகள், ஆடுகள், கோழிகளைப் பராமரித்து பாதுகாக்கும் மையமாகவும், இரண்டாவது கட்டமாக, மாதிரி ஆட்டுப் பண்ணைகளை விவசாயிகள் பார்வையிட்டு, அவர்கள் சொந்தமாக பண்ணை அமைக்கவும் வழிவகை செய்யப்படும். மூன்றாவது கட்டமாக, கால்நடை ஆராய்ச்சி மையத்தில் அறிவியல் ரீதியாக உலக அளவில் பால் பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.
உணவுப் பொருள் தயாரிப்பதற்கான தரக் கட்டுப்பாடு மையம் அமைக்கப்படும். இதற்கான அலுவலகம், ஆராய்ச்சிக் கட்டடம் கட்டப்படும்.
நான்காவதாக, விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும். பாலை பதப்படுத்த தேவையான உபகரணங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்படும்.
இந்த மையங்களை ஒருங்கிணைத்து, விவசாயிகள் பயன்பெறக் கூடிய ஆடு, மாடு, கோழிகள் போன்றவை ஆராய்ச்சி மையத்தில் பராமரிக்கப்படும். இதற்காக, ஒரு மாதத்துக்குள் மதிப்பீடு திட்ட அறிக்கை சமர்பிக்கவும், அதற்கான அரசாணை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கே.சண்முகம்.
ஆய்வின் போது, தமிழக அரசின் நிதித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத் துறை முதன்மைச் செயலர் கே.கோபால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி தனி அலுவலர் கிரன் குராலா,  உதவி ஆட்சியர் ஸ்ரீகாந்த், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மனோகரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

திண்டிவனம் உணவுப் பூங்காவுக்கு நிலம் கையகப் பணி ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெலாக்குப்பம் சிப்காட் பகுதியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு 
சார்பில் அமையவுள்ள உணவுப் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
தமிழக அரசின் தொழில் துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வெண்மணியாத்தூர் பகுதியில் தொழில்பேட்டை(சிப்காட்) அமைக்கும் பணி 2011-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இதற்காக, தமிழக அரசால் நில கையகம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, வெண்மணியாத்தூர், பெலாக்குப்பம், கொள்ளார் ஆகிய கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. எனினும், நிலம் கையகப் பணிகள் முடிந்து, பலருக்கு இழப்பீடு வழங்காமல் நிலுவை உள்ளதாகத் தெரிகிறது.
இந்த சிப்காட் பகுதியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில், புதிதாக உணவுப் பொருள்கள் பதப்படுத்துதல் தொடர்பான தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.
இதற்காக, தொழில்பேட்டை பகுதியில் 155 ஏக்கர் பரப்பளவில் பெலாக்குப்பம் பகுதியில், உணவுப் பூங்கா அமைக்கும் பணிகளைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக நடைபெற்று வரும் நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு தலைமைச் செயலர் கே.சண்முகம், நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால் ஆகியோர், திண்டிவனத்துக்கு புதன்கிழமை வந்து தொழில் பூங்கா அமைய உள்ள இடத்தைப் பார்வையிட்டு, வரைபடங்களுடன் திட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, சிப்காட் பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு, அதன் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை நிலவரம், மேலும், வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்து விரிவான அறிக்கையை தயார் செய்து அனுப்பிவைக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் முதன்மை செயலாளர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, கள்ளக்குறிச்சி மாவட்டப் பிரிப்பு தனி அலுவலர் கிரன்குராலா, திண்டிவனம் கோட்டாட்சியர் மெர்சி ரம்யா,  திண்டிவனம் வட்டாட்சியர் ரகோத்தமன், கடலூர் சிப்காட் திட்ட அலுவலர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பி.தாமோதரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com