சுடச்சுட

  

  கரும்பு கொள்முதல் விலையை மாற்றியமைக்க வேண்டும்: மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை

  By DIN  |   Published on : 13th September 2019 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் கரும்பு விவசாயத்தை மீட்க, மத்திய அரசு கரும்பு கொள்முதல் விலையை வயல் விலையாக நிர்ணயிக்க வேண்டுமென கரும்பு விவசாயிகள் மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
  தமிழகத்தில் கரும்பு உற்பத்தி தொடர்பாக சென்னையில் அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
  இதில், பங்கேற்ற விழுப்புரம் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் டி.பாண்டியன் உள்ளிட்டோர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது:
  மத்திய அரசு கரும்பு கொள்முதல் விலையை கரும்பு பிழிதிறன் அடிப்படையில் கணக்கிட்டு, கடந்தாண்டைப்போலவே டன்னுக்கு ரூ.2,750 என்று நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில் சராசரி கரும்பு பிழிதிறன் 9 சதவீதம், ஏக்கருக்கு விளைச்சல் 25 முதல் 30 டன்னாகவே உள்ளது. விவசாய சாகுபடி செலவு உயர்ந்து வரும் நிலையில், தற்போது டன்னுக்கு ரூ.2,612.50 மட்டுமே கிடைக்கிறது. இதனால், கரும்பு கொள்முதல் விலையை வயல் விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
  சர்க்கரை ஆலைகள் மத்திய, மாநில அரசுகள் நிர்ணயித்த கரும்பு விலையை விவசாயிகளுக்கு கொடுக்க முடியாமல், கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்துள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வங்கிகள் நிதி உதவி செய்ய மறுப்பதுடன், விவசாயிகளுக்கு ஆலைகள் பரிந்துரை செய்யும் கரும்புப் பயிர் கடனையும் தர மறுக்கின்றன.
  இதனால், கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தித் தொழிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை கடன் வழங்குவதன் மூலம் அந்த ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசின் கொள்முதல் விலையை நிலுவை இல்லாமல் வழங்கி வருகின்றன. தனியார் ஆலைகள் எவ்வித உதவிகளையும் மாநில அரசிடமிருந்து பெற முடியவில்லை. கரும்பு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தவணை செலுத்திய விவசாயிகளுக்கு கரும்புப் பயிர் நோய், வறட்சி, மழை வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்படும்போது, அதற்கான இழப்பீடுகள் கிடைப்பதில்லை. எனவே, கரும்பு காப்பீட்டுத் தொகை செலுத்திய விவசாயிகளுக்கு நேரடியாக இழப்பீட்டை கிடைக்கச் செய்ய வேண்டும்.
  கரும்புக்கான கொள்முதல் விலையை ஒழுங்குபடுத்த கரும்பு சட்டத்தின்கீழ், கரும்பு கட்டுப்பாட்டுக் குழுவை அரசு அமைக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் கடன் வழங்கவும், தேசிய அளவில் நிதி மேலாண்மை ஆணையம் அமைக்கவும் வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.சங்கச் செயலர் ராஜ்குமார், பொருளாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் பரமசிவம், கலிவரதன், முத்து, நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai