சுடச்சுட

  

  விழுப்புரத்தில் சாலை விரிவாக்கத்துக்காக கோயில்கள் அகற்றம்

  By DIN  |   Published on : 13th September 2019 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக வியாழக்கிழமை 2 கோயில்கள் இடித்து அகற்றப்பட்டன.
  விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கோலியனூர் வரை சாலை அகலப்படுத்தும் பணியும், நகர்ப் பகுதியில் சாலையோர கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.
  கிழக்கு பாண்டி சாலையில், சாலையோரம் ஆக்கிரமித்திருந்த வழிபாட்டுத் தலங்களை அகற்ற, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அவகாசம் வழங்கி நோட்டீஸ் அளித்திருந்தனர். இதையடுத்து, கடந்த 9-ஆம் தேதி முதல் ரயில்வே மேம்பாலப் பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.
  அந்தப் பகுதியிலிருந்த பாலமுருகன் கோயிலை அகற்ற மூன்று நாள்கள் அவகாசம் கேட்டனர். அந்தக் கோயிலில் இருந்த மூலவர் சிலையை எடுத்து பாலாலயம் செய்து அருகே உள்ள ரயில்வே குடியிருப்புப் பகுதியில் தற்காலிகமாக வைக்கப்பட்டது. உற்சவர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
  இதேபோல, மாதா கோயில் எதிரே ராஜகணபதி கோயிலில் இருந்த விநாயகர் சிலையும் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் தற்காலிகமாக வைக்கப்பட்டது.
  போலீஸார் துணையுடன் வியாழக்கிழமை காலை வந்த நெடுஞ்சாலைத் துறையினர் இரு கோயில்களின் கட்டடங்களையும் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு இடித்து அகற்றினர்.
   அங்கிருந்த பழைமையான அரச மரத்தையும் அகற்றும் பணி நடைபெற்றது.
  மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு எதிரே சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள புத்துவாழி மாரியம்மன் கோயிலை அகற்ற 5 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
  இந்தக் கோயில் சனிக்கிழமை (செப்.14) அகற்றப்படும் என்றும், கோலியனூர் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai