திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் விழுப்புரத்திலேயே நீடிக்க வலியுறுத்தி போராட்டம்
By DIN | Published On : 19th September 2019 01:53 AM | Last Updated : 19th September 2019 01:53 AM | அ+அ அ- |

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தை விழுப்புரத்திலேயே நீடிக்க வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் திருச்சி - சென்னை நான்கு வழிச்சாலையில் பேரங்கியூரில் புதன்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் அரசுத் தரப்பில் நடைபெற்று வருகிறது. இதில், விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியப் பகுதிகள் விழுப்புரத்திலேயே நீடிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரத்திலிருந்து 10 முதல் 30 கி.மீ. தொலைவிலுள்ள அரசூர், திருவெண்ணெய்நல்லூர், மடப்பட்டு, பெரியசெவலை, சித்தலிங்கமடம், திருநாவலூர், முகையூர்ஆகிய பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட இணைப்புக் குழு மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில், விழுப்புரம் அருகே பேரங்கியூரில், திருச்சி - சென்னை நான்கு வழிச் சாலையில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட பாமக இளைஞரணிச் செயலர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் முருகன், மாவட்ட விசிக பொருளாளர் இளங்கோவன், ஒன்றிய தேமுதிக செயலர் ராமச்சந்திரன், நகர அமமுக செயலர் சோலையப்பன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் மணிகண்டன், இந்து முன்னணியின் மாவட்டச் செயலர் சதீஷ், நகர தேமுதிக செயலர் அச்சுமுருகன், மாவட்ட பகுஜன் சமாஜ் அமைப்பாளர் சத்தியமூர்த்தி, விழுப்புரம் இணைப்புக் குழு நிர்வாகி புத்தர் உள்ளிட்டோர் பேசினர்.
திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர், முகையூர் பகுதிகளை விழுப்புரத்திலேயே நீடிக்க வேண்டி கடந்த 9 மாதங்களாகப் போராடி வருகிறோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கியும், முதல்வருக்கு 5 ஆயிரம் தபால் அட்டைகளையும் அனுப்பியுள்ளோம் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.
போலீஸார் குவிப்பு: போராட்டத்தையடுத்து, விழுப்புரம் கூடுதல் காவல் துறைக் கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையில், உளுந்தூர்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்தர், காவல் ஆய்வாளர்கள் ஜெயலட்சுமி, மகேஸ்வரி, காவல் உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், ஐயனார், அகிலன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையோரம் தடுப்புகளை அமைத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.