கட்டண நிலுவை பிரச்னை: போட்டி போட்டுக் கொண்டு இணைப்புகளை துண்டித்த மின் வாரியம் - பிஎஸ்என்எல்!

விழுப்புரம் மாவட்டத்தில் மின் வாரியம், பிஎஸ்என்எல் நிர்வாகங்கள் கட்டண நிலுவை பிரச்னை காரணமாக, போட்டி


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மின் வாரியம், பிஎஸ்என்எல் நிர்வாகங்கள் கட்டண நிலுவை பிரச்னை காரணமாக, போட்டி போட்டுக்கொண்டு எதிர் தரப்பு அலுவலகங்களுக்கான இணைப்புகளைத் துண்டித்ததால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர். 

விழுப்புரத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்காக திங்கள்கிழமை மின்வாரிய அலுவலகங்களுக்குச் சென்ற பொது மக்களை, இணைய வழி இணைப்பு கிடைக்கவில்லை எனக் கூறி, மின் ஊழியர்கள் காத்திருக்க வைத்தனர். இதே போல, விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம், செஞ்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்த வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைந்தனர். 

இது குறித்து மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதால்,  வெள்ளிக்கிழமை அந்த அலுவலகத்துக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொலைத் தொடர்பு கோபுர சிக்னல் வழங்கும் முக்கியத் தளமான அந்த அலுவலகத்தில் பேட்டரி, ஜெனரேட்டர் வசதி இல்லாததால் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு சேவை பாதித்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து, இரு தினங்கள் விடுமுறையாகிப் போனதால் இப்பிரச்னையை தீர்க்க வழி இல்லாமல் போனது. 

அதேபோல, மின்வாரிய தரப்பிலும் பிஎஸ்என்எல் இணைய வழி இணைப்புக்கான கட்டணம் நிலுவை இருந்தது. இதனால், பிஎஸ்என்எல் நிர்வாகத்தினர் திடீரென வெள்ளிக்கிழமை மாலையே மின்வாரிய அலுவலகங்களுக்கான இணையவழி இணைப்புகளை துண்டித்துவிட்டனர். குறிப்பாக, விழுப்புரம் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் சர்வர் இயங்கும் இணைய இணைப்பு துண்டிப்புக்கு உள்ளானதால், கணினிகள் வாயிலாக மின் கட்டணம் வசூலிக்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னை திங்கள்கிழமை வரை நீடித்தது.

இது குறித்து,  விழுப்புரம் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் காளிமுத்துவிடம் கேட்டபோது, இந்த பிரச்னை குறித்து இரு துறைகளின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார். 

இதனிடையே, இரு துறைகளின் அதிகாரிகள் பேசியதன் பேரில், திங்கள்கிழமை மாலை முதல் படிப்படியாக இணைய வழி இணைப்பு வழங்கப்பட்டு வருவதாக, மின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இரு அரசுத் துறையினரின் அலட்சியத்தால் வாடிக்கையாளர்களான பொது மக்கள் இரு தினங்களாக அவதிப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com