விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: முதல் நாளில் சுயேச்சை வேட்பு மனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை


விழுப்புரம்/புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சுயேச்சையாகப் போட்டியிட ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பு மனு தாக்கல்  திங்கள்கிழமை  தொடங்கியது. தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலரான, மாவட்ட வழங்கல் அலுவலர் மு.சந்திரசேகரன் தலைமையில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. 
தேர்தல் அலுவலகத்தின் வாயில் பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் எல்லைக் கோடுகள் அமைத்து, வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவீந்திரன்,  விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையில்  பாதுகாப்பு போடப்பட்டது.
முதல் நாளில் சுயேச்சை மனு: முதல் நாளான திங்கள்கிழமை பகல் 12 மணியளவில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகமரைபுதூரைச் சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன்(38) என்பவர், தேர்தல் நடத்தும் அலுவலர் மு.சந்திரசேகரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீரவன்னியர்குல சத்திரியர் முன்னணி அமைப்பின் நிறுவனர் தலைவரான நான்,  தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் இதுவரை 33 முறை போட்டியிட்டுள்ளேன். விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுவது 34-ஆவது முறையாகும். நெல்லை மாவட்டம், நான்குநேரி தொகுதியிலும் போட்டியிடுவதற்கு செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளேன் என்றார்.
முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வருகிற புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் மனு தாக்கல் செய்வர் எனத் தெரிகிறது.
புதுச்சேரி: புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், சுற்றுலாத் துறை இயக்குநருமான முகமது மன்சூரிடம் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுவை தினமும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களைப் பெற்ற பிறகே வேட்பாளரை அறிவிக்கவுள்ளன. எனவே, முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com