Enable Javscript for better performance
வழக்குகளில் இருந்து தப்பிக்க தாதா மணிகண்டன் வெளிநாடு தப்ப முயன்றார்: விழுப்புரம் எஸ்.பி. பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    வழக்குகளில் இருந்து தப்பிக்க தாதா மணிகண்டன் வெளிநாடு தப்ப முயன்றார்: விழுப்புரம் எஸ்.பி. பேட்டி

    By DIN  |   Published on : 25th September 2019 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வழக்குகளில் இருந்து தப்பிக்க, தாதா மணிகண்டன் வெளிநாடு தப்ப முயன்றதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.
    என்கவுன்ட்டர் தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அவர் அளித்த பேட்டி:
    தாதா மணிகண்டன் மீது  8 கொலை வழக்குகள் உள்ளன. இதில் 4 பேரை நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்துள்ளார். மேலும் மணிகண்டன் மீது 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. மொத்தம் 28 வழக்குகள் மணிகண்டன் மீது உள்ளன. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரு என்பவரை மணிகண்டன் கொலை செய்த வழக்கு உள்ளது. அதோடு மணிகண்டன், கடந்த 2009-ஆம் ஆண்டு இரட்டை கொலை செய்துள்ளார்.
    குயிலாபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் தரப்புக்கும், இவர் தரப்புக்கும் இடையே  உள்ள முன் விரோதத்தினால் 21 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரோவில் பகுதியில் ரிலையன்ஸ் பாபுவை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் தாதா மணிகண்டன் முதல் குற்றவாளியாவார்.
    இந்த வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், மணிகண்டன் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.
     மணிகண்டனை கைது செய்ய ஆரோவில் காவல் உதவி ஆய்வாளர் பிரபு, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி: தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று கைது செய்ய முயன்றனர். இதில் காவல் உதவி ஆய்வாளர் பிரபுவை மணிகண்டன் பட்டாக் கத்தியால் அரிவாள் வெட்டினார். இதில் பிரபு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. முற்றிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையாலும், தற்பாதுகாப்புக்காகவும்  மணிகண்டனை துப்பாக்கியால் சுடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தில்   எஸ்.ஐ.பிரபுக்கு  பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எஸ்.ஐ. பிரகாஷுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
    மணிகண்டன் வழக்குகளில் இருந்து தப்புவதற்காக வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவரை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதற்கே முயற்சித்தோம் என்றார் எஸ்.பி. ஜெயக்குமார்.
    டிஜிபி ஆறுதல்: முன்னதாக, தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளர் பிரபுவைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai