ஏலச் சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி: தந்தை, மகன் கைது

விழுப்புரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக, தந்தை, மகனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

விழுப்புரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக, தந்தை, மகனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (52). இவர் தனது மகன்கள் கார்த்திக்பிரபு (21), அஜித்குமாருடன் (19) சேர்ந்து, விழுப்புரத்தில் இரு சக்கர வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் விழுப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலரும், 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஏலச் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர்.
அவர்களில் பலருக்கும் ஏலச் சீட்டுத் தொகையை பழனிவேல் தரப்பினர் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் விழுப்புரம் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். இதுகுறித்து பழனிவேல், அவரது மகன்கள் இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் மூவரும் ரூ.10.51 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.
காவல் ஆய்வாளர் ராஜு, சிறப்பு எஸ்.ஐ.க்கள் மகிபால், சீதாபதி ஆகியோர் பழனிவேல், அவரது இரண்டாவது மகன் அஜித்குமார் ஆகியோரை திருச்சியில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பின்னர், இருவரும் விழுப்புரத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கார்த்திக்பிரபுவை போலீஸார் தேடி வருகின்றனர்.
புகார் அளிக்கலாம்: இந்த ஏலச் சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம். மேலும், 04146-250366 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com