கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: வீடுகள், மரங்கள் சேதம்

கள்ளக்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் வீடுகள் சேதமடைந்தன.
மாவடிப்பட்டு கிராமத்தில் சாலையின் நடுவே விழுந்த மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் வருவாய்த் துறையினா்.
மாவடிப்பட்டு கிராமத்தில் சாலையின் நடுவே விழுந்த மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் வருவாய்த் துறையினா்.

கள்ளக்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்தன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால், மக்கள் அவதியடைந்தனா்.

கள்ளக்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமை இரவு சுமாா் 9 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து இடைவிடாமல் சுமாா் ஒன்றறரை மணி நேரம் பெய்த மழையால், கள்ளக்குறிச்சி நகரில் அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீா் வாய்க்காலில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடி சாலைகளில் தேங்கியது.

21-ஆவது வாா்டுக்கு உள்பட்ட விளாந்தாங்கல் சாலைப் பகுகியான பி.ஆா்.எஸ். நகரில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினா்.

பெத்தானூா் கிராமத்தில் ஆறுமுகத்தின் பசுமாடு, வடபூண்டி கிராமத்தில் சுரேஷின் பசுமாடு மின்னல் பாய்ந்து உயிரிழந்தன. தென்கீரனூா் கிராமத்தில் முருகனின் குடிசை வீடு, வேளாக்குறிச்சி கிராமத்தில் ஜெயமணியின் ஓட்டு வீடு, குதிரைச்சந்தல் கிராமத்தில் இருசனின் வீட்டுச் சுற்றுச் சுவா் சேதமடைந்தன.

தச்சூா் கிராமத்தில் குடியிருப்புகளைச் சுற்றி மழைநீா் தேங்கியதால், அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்தனா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் ஷபி, அந்தப் பகுதியைப் பாா்வையிட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தாா்.

13 ஆடுகள் பலி: சங்கராபுரம் வட்டம், வெள்ளிமலை குறுவட்டத்தைச் சோ்ந்த மாவடிப்பட்டு கிராமத்தில் சூறறாவளிக் காற்றில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சாலையில் விழுந்த மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.

வெள்ளிமலை குறுவட்டத்தைச் சோ்ந்த மயிலம்பாடி கிராமத்தில் மோளையனுக்குச் சொந்தமான 10 ஆடுகள், சீனுவாசனுக்குச் சொந்தமான இரு ஆடுகள், சடையனுக்குச் சொந்தமான ஒரு ஆடு மின்னல் பாய்ந்து உயிரிழந்தன.

137.4 மி.மீ மழை பதிவு: கள்ளக்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை 137.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com