விக்கிரவாண்டியில் மீண்டும் வென்றால் திமுக ஆட்சி மலரும்: துரைமுருகன் நம்பிக்கை

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்  மீண்டும் வெற்றி பெற்றால், தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் என்று, அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்தார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்  மீண்டும் வெற்றி பெற்றால், தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் என்று, அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம், தென்னமாதேவியில் உள்ள தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்றார்.  விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலர் க.பொன்முடி தொடக்கிவைத்துப் பேசினார். பொருளாளர் துரைமுருகன் தலைமை வகித்துப் பேசியதாவது: விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 1952-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது,  திராவிடநாடு கொள்கையை ஏற்பவர்களுக்கு ஆதரவு தருவதாக அண்ணா அறிவித்தார்.
விக்கிரவாண்டியில் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கோவிந்தசாமி,  ராமசாமி படையாட்சியார் உள்ளிட்ட பலர் அதை ஏற்று வெற்றியும் பெற்றனர்.
அப்போது, ஆட்சியை பிறர் பிடிக்கக் கூடாது என்று காங்கிரஸார் சூழ்ச்சி செய்து, ராஜாஜியை முதல்வராக்கினர். அவருக்கு ஆதரவளித்தவர்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கினர்.திராவிட நாடு கோரிக்கைக்கு கையெழுத்திட்ட பலர் தடம் மாறினர். விக்கிரவாண்டியில் போட்டியிட்ட ஏ.கோவிந்தசாமி மட்டும் கொள்கை மாறாமல் நின்றார். 
அவர்தான், முதல் முதலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்ணாவுக்கு திமுகவின் சின்னத்தை ஏற்படுத்திக் கொடுத்த தொகுதி விக்கிரவாண்டி. 
இடைத்தேர்தல் மூலம் மீண்டும் இத்தொகுதியில்  உதயமாகும் சூரியன்,  அதிமுக அரசை அஸ்தமனம் செய்ய வேண்டும். ஏற்கெனவே நடைபெற்ற இடைத் தேர்தலில் 22-க்கு, 13 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். நான்கு தொகுதிகள் நமக்கு கூடுதலாக கிடைத்திருந்தால் அதிமுக அரசு நீக்கப்பட்டு இருக்கும்.
இப்போதும், அந்த 4 தொகுதிகளைக் கொடுத்தால், அதிமுக அரசை மு.க.ஸ்டாலின் அகற்றுவார். அதற்கு விக்கிரவாண்டியில் மட்டும் வெற்றியைக் கொடுங்கள், மீதி 3 தொகுதிகள் தயாராக வைத்துள்ளோம் என்பதை சூசகமாக தெரிவிக்கிறேன்.
திமுக காணாமல் போகும் என பலர் நினைக்கிறார்கள், சிறப்பான கூட்டணி அமைத்து மு.க.ஸ்டாலின் நிலை நிறுத்தியுள்ளார். இன்னும் சில மாதங்களில் அவர் முதல்வராகவும் ஆவார்.  விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் தான் அரசுக் கல்லூரிகள், அரசுக் கட்டடங்கள் வந்து வளர்ச்சி பெற்றது என்றார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, த.மோ.அன்பரசன், செல்வகணபதி, எம்.பி.க்கள் ராசா, ஜெகத்ரட்சகன், துரை.ரவிக்குமார், பொன்.கௌதமசிகாமணி, வேட்பாளர் நா.புகழேந்தி, மாவட்டச் செயலர்கள் கே.எஸ். மஸ்தான், அங்கையற்கண்ணி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com