விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க வலியுறுத்தி திருக்கோவிலூரில் கடையடைப்பு

விழுப்புரம் மாவட்டத்திலேயே திருக்கோவிலூர் நீடிக்க வலியுறுத்தி, அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் சனிக்கிழமை


விழுப்புரம் மாவட்டத்திலேயே திருக்கோவிலூர் நீடிக்க வலியுறுத்தி, அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் சனிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்வாக வசதிக்காக, விழுப்புரம் மாவட்டத்தை  இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த ஜனவரி 8-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, தனி அதிகாரி நியமிக்கப்பட்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம்,  திருக்கோவிலூர் வட்டம் உள்ளிட்ட பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,  இப்பகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடரவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், திருக்கோவிலூரில் வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் சனிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகம், தேனீர் கடைகள் மட்டும் இயங்கின.
ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், கோரிக்கையை வலியுறுத்தி, திருக்கோவிலூரில் வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திருக்கோவிலூர் எம்எல்ஏ க.பொன்முடி, விழுப்புரம் தொகுதி மக்களை உறுப்பினர் துரை.ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து க.பொன்முடி எம்எல்ஏ கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுவதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், பொதுமக்களின் கருத்தறிந்து அதற்கேற்றவாறு பிரிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com