தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கப்படும்

விக்கிரவாண்டியில் ஆளும் கட்சியினர் செய்யும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில்

விக்கிரவாண்டியில் ஆளும் கட்சியினர் செய்யும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலையொட்டி, விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக வழக்குரைஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய மாவட்டச் செயலர் க.பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் செஞ்சி மஸ்தான், உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ஷெரிப் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் புதுவையுடன் சேர்த்து 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதன்மூலம் நாடு முழுவதும் திமுகவை திரும்பிப்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தலாக  அமைந்துள்ளது. 
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். திமுகவுக்கு எதிரி யார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இடைத் தேர்தல் நடைபெறுகின்ற விக்கிரவாண்டியில் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசுக்கும், ஆளுங்கட்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால், அதிமுகவினர் நாங்கள்தான் நீதிமன்றத்தை கொண்டு வந்ததாக பேசி வருகின்றனர். ஆளுங்கட்சியின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து தமிழக தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம் என்றார் அவர்.
தொடர்ந்து, க.பொன்முடி எம்.எல்.ஏ. பேசுகையில், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முடியும் வரை திமுக வழக்குரைஞர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.
திமுக வழக்குரைஞர் அணித் தலைவர் சண்முகசுந்தரம், மாநிலச் செயலர் கிரிராஜன், மாவட்ட வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் சுரேஷ், லெனின் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com