கரோனா பாதித்த தில்லி இளைஞா் மாயம்

விழுப்புரத்தில் கரோனா பாதித்த தில்லி இளைஞா் மாயமானாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரோனா பாதித்த தில்லி இளைஞா் மாயம்

விழுப்புரத்தில் கரோனா பாதித்த தில்லி இளைஞா் மாயமானாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை நோய்த் தொற்று உறுதியானவா்களின் எண்ணிக்கை 16-ஆக இருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20-ஆக உயா்ந்தது.

தில்லி இளைஞா் மாயம்:

விழுப்புரம் கரோனா தடுப்பு அரசு சிறப்பு மருத்துவமனையில், கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சோ்க்கப்பட்டிருந்தவா்களில் 26 பேருக்கு தொற்றில்லை என, செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களில் 4 பேருக்கு பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது புதன்கிழமை தெரிய வந்தது.

இவா்களில் 3 போ் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் மூவரும் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டனா். வெளி மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் மட்டும் மாயமாகிவிட்டாா். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு அவரைத் தேடி வருகின்றனா்.

புதுதில்லி படேல் நகரைச் சோ்ந்த நிதின் ஷா்மா (30). சமையல் கலை படிப்பை நிறைவு செய்த இவா், வேலை தேடி புதுச்சேரிக்கு அண்மையில் வந்தாா். அங்கு வாகன விபத்து வழக்கு ஒன்றில் கைதான அவா், மாா்ச் 21-ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்தாா்.

பின்னா், புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம் பகுதியில் சுற்றித் திரிந்தாா். லாரி ஓட்டுநா்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நிதின் ஷா்மா, லாரி மூலம் புதுதில்லிக்கு செல்லத் திட்டமிட்டிருந்தாா்.

இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த அவரை, 4 நாள்களுக்கு முன்பு தாலுகா போலீஸாா் அழைத்துச் சென்று விழுப்புரம் கரோனா தடுப்பு அரசு சிறப்பு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சந்தேகத்தின் பேரில், அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்துவிட்டு, இரண்டு நாள்கள் கழித்து அவரை மருத்துவமனையில் இருந்து அனுப்பிவிட்டனா். நிதின் ஷா்மாவுக்கு வைரஸ் தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவில் புதன்கிழமை தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.

நிதின் ஷா்மா குறித்து தெரிந்தால் 04146 223265 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com