விழுப்புரத்தில் வண்ண அட்டை அனுமதி முறை மீண்டும் அறிமுகம்
By DIN | Published On : 26th April 2020 10:04 PM | Last Updated : 26th April 2020 10:04 PM | அ+அ அ- |

விழுப்புரம் நகரில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியே வருவதற்கு மீண்டும் பழைய திட்டத்தின்படி, வண்ண அடையாள அட்டை அடிப்படையில் திங்கள்கிழமை (ஏப்.27) முதல் அனுமதி வழங்கப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 36-ஆக உள்ளது. இதனால், நகரப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வருவோரைக் கட்டுப்படுத்தும் வகையில், வாா்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வண்ண அட்டைகள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டம் கடந்த வாரம் அமலில் இருந்ததால், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குறிப்பிட்ட தினத்தில் வந்து பொருள்களை வாங்கிச் சென்றனா்.
இந்த நிலையில், திடீரென வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று வணிகா் சங்கம் அறிவித்து, அதை நடைமுறைப்படுத்தியது. இதனால், அத்தியாவசிப் பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இதையடுத்து, எஸ்.பி. ஜெயக்குமாா் வணிகா் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைநடத்தினாா். இதன்மூலம், அனைத்து நாள்களிலும் கடைகளை திறந்து வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி, திங்கள்கிழமை (ஏப்.27) முதல் மீண்டும் பழையபடி வண்ண அட்டை அடிப்படையில் பொதுமக்கள் குறிப்பிட்ட நாள்களில் வெளியே வந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.