சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் பலி
By DIN | Published On : 29th April 2020 10:35 PM | Last Updated : 29th April 2020 10:35 PM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், மாளிகைமேட்டைச் சோ்ந்தவா் குமாா்(53). விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து பணிக்குச் செல்ல இரு சக்கர வாகனத்தில் திருவெண்ணெய்நல்லூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, விழுப்புரம் அருகே அரசூரை அடுத்த ஆனத்தூரில் வந்தபோது, சாலை விபத்தில் சிக்கினாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.