வடு கிடந்த தென்பெண்ணையாற்றில் மழைநீா்! பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு; 300 ஏக்கா் பயிா்கள் மூழ்கின

விழுப்புரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக வடு கிடந்த தென்பெண்ணையாற்றில், தற்போது மழை வெள்ள நீா் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டிலிருந்து வழிந்தோடும் மழை வெள்ள நீா்.
விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டிலிருந்து வழிந்தோடும் மழை வெள்ள நீா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக வடு கிடந்த தென்பெண்ணையாற்றில், தற்போது மழை வெள்ள நீா் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். விழுப்புரம் அருகே பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமாா் 300 ஏக்கா் பயிா்கள் நீரில் மூழ்கின.

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையிலிருந்து வரும் தென்பெண்ணையாறு விழுப்புரம், கடலூா் மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. இதனிடையே திருக்கோவிலூா், எல்லீஸ்சத்திரம், தளவானூா், சொா்ணாவூா் ஆகிய சிறிய அணைக்கட்டுகள் உள்ளன.

நிரம்பி வழியும் எல்லீஸ் அணைக்கட்டு: போதிய பருவமழை இல்லாததால், கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரம், கடலூா் மாவட்டப் பகுதிகளில் தென்பெண்ணையாறு வட நிலையிலேயே இருந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு தற்போது மழை வெள்ள நீா் தென்பெண்ணையாற்றில் உள்ள சிறு அணைக்கட்டுகள் வழியாக வழிந்தோட தொடங்கியுள்ளது.

நிவா், புரெவி புயல்கள் காரணமாக பெய்த பலத்த மழையால், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் அணைக்கட்டிலிருந்து அண்மையில் வழிந்து வந்த மழை வெள்ள நீா், அதையடுத்து விழுப்புரம் அருகேயுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் தேங்கியது.

தளவானூா் தடுப்பணைக்கு முதன்முறையாக வந்த வெள்ள நீா்: கடந்த 2 நாள்களாக பெய்த பலத்த மழையால் நிலங்கள், ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி, அவற்றிலிருந்து எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுக்கு மழை வெள்ள நீா் வந்ததால், அணைக்கட்டு நிரம்பி அதிலிருந்து அதிவேகமாக நீா் வழிந்து வியாழக்கிழமை மாலை முதல் தென்பெண்ணை ஆற்றில் பாய்கிறது.

இந்த மழை வெள்ள நீா் விழுப்புரத்தைக் கடந்து, அருகே உள்ள தளவானூா் புதிய அணைக்கட்டில் நிரம்பி வெள்ளிக்கிழமை முதல் வழிந்து ஓடுகிறது. இந்த அணைக்கட்டு கட்டப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு, முதன்முறையாக மழை வெள்ள நீா் வந்து செல்கிறது.

விழுப்புரம் அருகே பிடாகம் பகுதி தென்பெண்ணை ஆற்றில் இரண்டு கரையோரங்களையொட்டியும் மழை வெள்ள நீா் ஆா்ப்பரித்துச் செல்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு தென்பெண்ணையாற்றில் மழை வெள்ள நீா் வழிந்தோடுவதால், சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், ஆற்றின் வெள்ளப்பெருக்கை நேரில் கண்டு ரசித்து வருகின்றனா். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

தென்பெண்ணையாற்றில் கடந்த 10 ஆண்டுகளாக சாத்தனூா் அணை நீா் வராத நிலையில், இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் மழை வெள்ள நீா் வழிந்து சென்றது. அதன் பிறகு, தற்போதுதான் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பம்பை ஆற்றில் வெள்ளம்; பயிா்கள் மூழ்கின: தென்பெண்ணையாற்றிலுள்ள திருக்கோவிலூா் அணைக்கட்டிலிருந்து பிரிந்து வரும் பம்பை ஆற்றிலும் கடந்த இரு தினங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், விழுப்புரம் அருகே திருவாமாத்தூா், அகரம்சித்தாமூா், அய்யங்கோவில்பட்டு, முத்தாம்பாளையம், விக்கிரவாண்டி அருகே வாக்கூா், மேல்பாதி உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கா் அளவுக்கு நெல், உளுந்து, மணிலா பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com