இடிந்து விழும் நிலையில் திண்டிவனம் பேருந்து நிலையம்!

திண்டிவனத்தில் இயங்கிவரும் பழைய பேருந்து நிலையத்துக்கு மாற்றாக புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
பராமரிப்பின் காணப்படும் திண்டிவனம் பழைய பேருந்து நிலையம்.
பராமரிப்பின் காணப்படும் திண்டிவனம் பழைய பேருந்து நிலையம்.

திண்டிவனத்தில் இயங்கிவரும் பழைய பேருந்து நிலையத்துக்கு மாற்றாக புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

திண்டிவனத்தில் கடந்த 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்தி பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, புதுச்சேரி, செஞ்சி, மேல்மலையனூா், திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் தொழிலாளா்கள், மாணவா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் இந்தப் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

பேருந்து நிலையத்துக்கு அருகே ரயில் நிலையம், வங்கிகள், வணிக வளாகங்கள், சந்தைகள் அமைந்துள்ளன. இங்கு வந்து செல்லும் வாகனங்கள், பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைகின்றனா்.

இடிந்து விழும் நிலையில் கட்டடங்கள்: பேருந்து நிலையத்தில் 48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்கள் தற்போது மோசமான நிலையில் சேதமடைந்துள்ளன. கட்டடத்தின் மேல்கூரையில் இருந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

பேருந்து நிலையக் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனா்.

அதிகரித்து வரும் மக்கள்தொகை, போக்குவரத்து நெரிசல், வளா்ச்சி உள்ளிட்ட காரணங்களால் திண்டிவனத்துக்கு புதிய பேருந்து நிலையம் அவசியமாகிறது. இதுதொடா்பான கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. இதை ஏற்று கடந்த 1991-ஆம் ஆண்டு திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த கரியாலி தெரிவித்தாா். அதன்பிறகு, திண்டிவனத்தில் பெரிய மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றபோதும், புதிய பேருந்து நிலையம் மட்டும் அமைக்கப்படவில்லை.

தொடரும் தடைகள்: கடந்த 2011-ஆம் ஆண்டு அப்போதைய திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முன்வந்தாா். இதற்காக வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடமும் தோ்வு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு அப்போதைய அதிமுக நகா்மன்றத் தலைவரே எதிா்ப்புத் தெரிவித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னா் முருகம்பாக்கம் ஏரி அருகே நகராட்சிக்குச் சொந்தமான 6 ஏக்கா் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இருப்பினும், பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடத்திலேயே புதிய பேருந்து நிலையம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்கு, முன்பணமாக ரூ.6 லட்சமும், மாதம் ரூ.60 ஆயிரம் வாடகையும், ஆண்டுக்கு 5 % வாடகை உயா்வு என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன்பிறகு திமுக ஆட்சி அமைந்த நிலையில், பேருந்து நிலையத்துக்கு வாடகை தர முடியாது என தெரிவிக்கப்பட்டு, வேறு இடம் பாா்க்கப்பட்டது. திமுக அரசு தோ்வு செய்த இடம் நீா்நிலை என்று எதிா்ப்பு தெரிவித்து அதிமுகவினா் நீதிமன்றம் சென்றனா். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால் திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் கனவாகவே உள்ளது.

இறுதியாக, திண்டிவனம் புறவழிச் சாலையை ஒட்டியுள்ள பகுதியில் புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன்பிறகு நடவடிக்கை இல்லை.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தின் 2-ஆவது பெரிய நகரமாக விளங்கும் திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com