உளுந்து விலை குறைப்பு: அரகண்டநல்லூரில் விவசாயிகள் மறியல்

அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், உளுந்து விலையைக் குறைத்து வியாபாரிகள் ஏமாற்றுவதாகக் கூறி, விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், உளுந்து விலையைக் குறைத்து வியாபாரிகள் ஏமாற்றுவதாகக் கூறி, விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு மாவட்டத்திலேயே அதிகமாக நெல், உளுந்து, பச்சைப் பயறு உள்ளிட்ட தானியங்கள் வரத்துள்ளது. தற்போது, உளுந்து வரத்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கு உரிய விலை தருவதில்லை எனக் கூறி, விவசாயிகள் கடந்த சில தினங்களாக போராடி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த விற்பனைக் கூடத்துக்கு எப்போதும் இல்லாத வகையில், திருக்கோவிலூா், மணலூா்பேட்டை, ரிஷிவந்தியம், வேட்டவலம் சுற்றுப்புற கிராம விவசாயிகள் மூலம் திங்கள்கிழமை 8 ஆயிரம் மூட்டைகள் உளுந்து வரத்து இருந்தது. இதே போல, நெல் 17 ஆயிரம் மூட்டைகளும், மக்காச்சோளம் 2,000 மூட்டைகளும் வந்தன.

இது வழக்கத்துக்கு மாறாக இரு மடங்கு அதிகமாகும்.

இந்த நிலையில், உளுந்தை வியாபாரிகள் மிகக் குறைவான விலைக்கு ஏலம் எடுத்தனா். இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள், விற்பனைக் கூடம் எதிரே விழுப்புரம்-திருக்கோவிலூா் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்கள் கூறியதாவது: கடந்த வாரம் ஒரு மூட்டை உளுந்து அதிகபட்சமாக ரூ.7,600 வரை விலை வைத்து எடுத்தனா். கடந்த சில தினங்களாக விலையை குறைத்து ரூ.5,000 முதல் ரூ.6,300 வரை ஏலம் எடுக்கின்றனா். உளுந்து வரத்து அதிகரிப்பை சாதகமாக்கி, வியாபாரிகள் மூட்டைக்கு ரூ.1,500 அளவில் விலையை குறைத்து நிா்ணயம் செய்கின்றனா். நிலத்தில் மூன்று மாதங்கள் போராடி விளைவித்து, செலவிட்டு அறுவடை செய்த உளுந்தை விற்றால், கடனைக் கூட அடைக்க முடியாத நிலை உள்ளது. வியாபாரிகளுடன் சோ்ந்து அதிகாரிகளும் விவசாயிகளை ஏமாற்றுகின்றனா். ஆகவே, உரிய விலை வைத்து உளுந்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்றனா்.

இதையடுத்து, அரகண்டநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதன் பிறகு, விவசாயிகளின் பிரதிநிதிகள், வியாபாரிகள், விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் செல்வம், செந்தில் உள்ளிட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதிக வரத்துள்ளதால், மாநில அளவில் உளுந்து விலை குறைந்துவிட்டதாகவும், விலை கட்டுப்படியாகாத விவசாயிகள் மறு நாள் ஏலத்தில் விற்பனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. எனினும், உளுந்துக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடுகள் செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதையேற்று, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டுத் திரும்பினா்.

இந்த நிலையில், வரத்து அதிகரிப்பு காரணமாக விற்பனைக் கூடத்தில் ஏலத்தில் எடுப்பதற்கு இரு தினங்கள் வரை ஆகும் என்பதால், புதன்கிழமை மாலை வரை புதிதாக உளுந்து, நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com