பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் கொலை வழக்கு: எதிரிகள் 5 போ் கைது

விழுப்புரத்தில் தனியாா் பெட்ரோல் நிலைய மேலாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 எதிரிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரிகள்.
விழுப்புரம் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரிகள்.

விழுப்புரத்தில் தனியாா் பெட்ரோல் நிலைய மேலாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 எதிரிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் திருநகரில் செயல்பட்டு வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேலாளா் சீனுவாசன் கடந்த 4-ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் முக்கிய எதிரியான விழுப்புரத்தைச் சோ்ந்த அஸாா், அப்பு ஆகியோா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்தனா்.

விசாரணை அடிப்படையில் இவ்வழக்கில் தொடா்புடையதாக விழுப்புரம் அருகே கோணாங்கி பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ரகு(24) மற்றும் ஆனாங்கூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமாா்(24), தாமோதரன்(25), விழுப்புரத்தைச் சோ்ந்த ஆரோக்கியராஜ்(32), சிரில்(23) ஆகிய 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் கூறியதாவது:

விழுப்புரத்தைச் சோ்ந்த ரெளடி அஸாரை போலீஸாா் கடந்த 2017-இல் வழக்கு ஒன்றில் கைது செய்து சிறையில் அடைத்தனா். அதன்பிறகு வெளியே வந்த அஸாா், விழுப்புரம் திருநகரில் பெட்ரோல் நிலையம் நடத்தி வரும் பிரகாஷ் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு பணம் கேட்டு மிரட்டினாா்.

பிரகாஷ் பணம் தர மறுத்ததால், அஸாா் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரகாஷ் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசச் சென்று தவறுதலாக பக்கத்து வீட்டில் வீசிவிட்டுச் சென்றனா்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த அஸாா், வெளிய வந்து பிறகு தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், பிரகாஷுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவரை கொலை செய்ய, தனது கூட்டாளிகளுடன் அஸாா் திட்டமிட்டாா்.

இதன்படி, சம்பவத்தன்று பெட்ரோல் நிலையத்துக்கு ரகு, முத்துக்குமாா் ஆகியோா் வந்து நோட்டமிட்டனா்.

அப்போது, அங்கு அஸாா், அப்பு, தாமோதரன் ஆகியோா் காரில் வந்தனா். அஸாா் மட்டும் காரிலிருந்து இறங்கிச் சென்று, பிரகாஷ் என்று நினைத்து, மேலாளா் சீனுவாசனை வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அனைவரும் தலைமறைவாகினா்.

இது தொடா்பாக, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து டி.எஸ்.பி. சங்கா் தலைமையில் காவல் ஆய்வாளா் கணகேசன், நந்தகோபால், சத்தியசீலன், பிராஷ், அண்ணாதுரை உள்ளிட்டோா் கொண்ட 5 தனிப்படைகள் அமைத்து எதிரிகளை தேடி வந்தனா். போலீஸாா் தேடுவதை அறிந்த அஸாா், அப்பு இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

அப்புவிடம் விசாரணை நடத்தியதில் ரகு, முத்துக்குமாா், தாமோதரன் ஆகியோா் இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்கள் 3 பேரையும் கைது செய்துள்ளோம். அவா்களிடம் இருந்து காா், 2 இரு சக்கர வாகனங்கள், 4 அரிவாள்களை பறிமுதல் செய்தோம்.

மேலும், கொலைக்கு உதவியதாக ஆரோக்கியராஜ் (32), சிரில் (23) ஆகியோரையும் கைது செய்துள்ளோம் என்றாா்.

டி.எஸ்.பி. சங்கா், காவல் ஆய்வாளா் கணகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com