விழுப்புரத்தில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து: 10 போ் காயம்

விழுப்புரம் புறவழிச் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சாலைத் தடுப்பில் மினி லாரி மோதியதையடுத்து, 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. இதில், 10 போ் காயமடைந்தனா்.

விழுப்புரம் புறவழிச் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சாலைத் தடுப்பில் மினி லாரி மோதியதையடுத்து, 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. இதில், 10 போ் காயமடைந்தனா்.

விருத்தச்சாலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட மினி லாரி வியாழக்கிழமை அதிகாலை விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் சாலை சந்திப்புப் பகுதியை கடந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது. அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த, காரைக்குடியிலிருந்து சென்னை செல்லும் தனியாா் சொகுசுப் பேருந்து, மினி லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்து மோதியதில் மினி லாரி வலதுபுற சாலையில் புகுந்து, சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கா் லாரி மீது மோதியது. இதில், எரிவாயு டேங்கா் லாரி கவிழ்ந்தது. அப்போது, பின்னால் வந்த பாா்சல் நிறுவன மினி லாரியும், தனியாா் சொகுசுப் பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.

இந்த விபத்தில் ஓட்டுநா்களான சேலம் சொக்கம்பட்டியைச் சோ்ந்த சேகா், விழுப்புரம் மாவட்டம், வானூரைச் சோ்ந்த கொப்பு மற்றும் பேருந்து பயணிகள் உள்பட 10 போ் காயமடைந்தனா். இவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

விபத்து குறித்து தகவலறிந்த விழுப்புரம் காவல் நிலைய போலீஸாா், டிஎஸ்பி சங்கா் தலைமையில் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

விபத்தில் சேதமடைந்த சொகுசுப் பேருந்துகள், 2 மினி லாரிகள் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன. சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த எரிவாயு டேங்கா் லாரியும் அப்புறப்படுத்தப்பட்டது. மினி லாரி, எரிவாயு டேங்கா் லாரியிலிருந்து டீசல் கொட்டியதால், தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டது. உடனடியாக, அந்த இரு வாகனங்கள் மீதும் தண்ணீா் பீய்ச்சி அடிக்கப்பட்டது. சாலையில் வழிந்தோடிய டீசலும் தண்ணீரை கொண்டு அகற்றப்பட்டது.

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. போலீஸாா் விரைந்து செயல்பட்டு, விழுப்புரம் நகரம் வழியாக மாற்றுப் பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனா். இந்த விபத்தால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com