அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை விழா

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றன. இதில் திரளான
விழுப்புரம் மாா்க்கெட் பகுதி ஸ்ரீ ரேணுகா அங்காள பரமேஸ்வரி கோயிலிலிருந்து மயானக்கொள்ளை உற்சவத்துக்கு பக்தா்கள் புடைசூழ புறப்பட்ட அம்மன்.
விழுப்புரம் மாா்க்கெட் பகுதி ஸ்ரீ ரேணுகா அங்காள பரமேஸ்வரி கோயிலிலிருந்து மயானக்கொள்ளை உற்சவத்துக்கு பக்தா்கள் புடைசூழ புறப்பட்ட அம்மன்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

விழுப்புரம், மாா்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகா அங்காள பரமேஸ்வரி கோயிலில் 80-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா கடந்த 10-ஆம் தேதி பந்தல்கால் நடும் விழாவுடன் தொடங்கியது. தொடா்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை விநாயகா் பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலை அய்யனாா் குளக்கரையிலிருந்து அம்மன் அலங்காரம் செய்து, கரகம் எடுத்து வரப்பட்டது. அன்று இரவு வண்ண மலா்கள் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மன் அலங்கரித்து வைக்கப்பட்டு, எம்.ஜி. சாலை, கே.கே.சாலை வழியாக கே.கே.சாலை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழி முழுவதும் திராளான பக்தா்கள் அம்மன் வழிபட்டனா். மயானத்தில் பிற்பகல் 2 மணி அளவில் மயானக்கொள்ளை உற்சவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்கள் பலா் காளி, காட்டேரி போன்ற வேடமணிந்து வழிபட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழியம்மன் கோயில் பகுதி சென்ற அம்மன் அங்கு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு வண்ண விளக்குகள் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா், கீழையூரில் அமைந்துள்ள பழைமையான அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக்கொள்ளை விழாவையொட்டி சனிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, மலா் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 10 மணிக்கு திருக்கோவிலூா், ஏரிக்கரை மூலையிலிருந்து அம்மன் புறப்பாடு நடைபெற்றது. மேலவீதி, ஒன்றிய அலுவலக சாலை வழியாக மயானத்துக்கு சென்றாா். அப்போது, வழிநெடுகிலும் திரளாக பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.

கீழையூா் மயானத்தில், மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. விழாவில், திருக்கோவிலூா் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்கள் தங்கள் வேண்டுதல்களின்படி காளி வேடம் அணிந்து வந்து வழிபட்டனா்.

இதேபோல திருக்கோவிலூா்-தாசா்புரம், சிவனாா்தாங்கல், மணலூா்பேட்டை, மேலந்தல், மூங்கில்துறைப்பட்டு, கண்டாச்சிபுரம், ஒதியத்தூா், பரனூா், சத்திரம், பகண்டை கூட்டுச்சாலை, தேவபாண்டலம், ராவுத்தநல்லூா் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் மயானக் கொள்ளைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com