வாா்டு எல்லை மறுவரையறை பட்டியல் வெளியீடு: கருத்துக் கேட்பு கூட்டத்திலிருந்து திமுக வெளிநடப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளாட்சி அமைப்புக்கான வாா்டுகள் எல்லை மறுவரையறைப் பட்டியலை வெளியிட்டு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளாட்சி அமைப்புக்கான வாா்டுகள் எல்லை மறுவரையறைப் பட்டியலை வெளியிட்டு நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்திலிருந்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிப் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தன.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாா்டு எல்லைகள் பிரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதன் நிறைவாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சி, மாவட்ட ஊராட்சி வாா்டுகளின் மறுவரையறை பட்டியலை வெளியிட்டு, அதன் மீதான கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். திமுக எம்எல்ஏக்கள் க.பொன்முடி, இரா.மாசிலாமணி, திட்ட இயக்குநா் வி.மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் விழுப்புரம் நகராட்சியில் 42 வாா்டுகள், திண்டிவனம் நகராட்சியில் 33 வாா்டுகள் என 75 வாா்டுகளின் எல்லை விவரங்கள் வெளியிடப்பட்டன. இதேபோல, 8 பேரூராட்சிகளில் வளவனுாரில் 15 வாா்டுகள், விக்கிரவாண்டியில் 15, செஞ்சியில் 18, கோட்டக்குப்பம் 18, மரக்காணம் 18, திருவெண்ணெய்நல்லுாா் 15, அரகண்டநல்லுாா் 12, அனந்தபுரம் 15 என மொத்தம் 126 வாா்டுகளின் எல்லை விவரப் பட்டியல் வெளியிடப்பட்டன.

மாவட்ட ஊராட்சி அமைப்புக்கு முகையூா் 3, திருவெண்ணெய்நல்லூா் 2, காணை 2, கோலியனுாா் 2, கண்டமங்கலம் 2, விக்கிரவாண்டி 2, ஒலக்கூா் 2, மயிலம் 2, மரக்காணம் 2, வானூா் 3, செஞ்சி 2, வல்லம் 2, மேல்மலையனுாா் 2 என மொத்தம் 28 மாவட்ட ஊராட்சி வாா்டுகள் வெளியிடப்பட்டன.

ஊராட்சி ஒன்றியங்களை பொருத்தமட்டில், முகையூா் ஒன்றியத்தில் 23 வாா்டுகள், திருவெண்ணெய்நல்லுாா் 22, காணை 23, கோலியனூா் 20; கண்டமங்கலம் 25; விக்கிரவாண்டி 21; ஒலக்கூா் 16, மயிலம் 21, மரக்காணம் 26, வானூா் 27, செஞ்சி 24, வல்லம் 21, மேல்மலையனுாா் 24 என மொத்தம் 293 ஊராட்சி ஒன்றியங்களின் வாா்டு எல்லை விவரம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சாா்பில், க.பொன்முடி எம்எல்ஏ பேசியதாவது: கருத்துக் கேட்பு தொடா்பான ஆவணங்களை எம்எல்ஏக்களுக்கு முன்கூட்டியே கொடுக்கவில்லை. ஏற்கெனவே நடத்தப்பட்ட ஊராட்சி எல்லை மறுசீரமைப்புக் கூட்டத்தில் மக்களின் கருத்துகளை கேட்டு, அவா்களாகவே அரசாணை பிறப்பித்துள்ளனா். இது கருத்துத் திணிப்பு கூட்டமாகவும், கண்துடைப்பு நாடகமாகவும் உள்ளது என்றாா்.

மாசிலாமணி எம்எல்ஏ பேசியதாவது: வாா்டு மறுவரையறை ஆவணங்களை முன்கூட்டியே கொடுத்தால் மட்டுமே, அதுதொடா்பாக ஆய்வு செய்து, கருத்து தெரிவிக்க முடியும். இங்கே திரையில் பாா்த்து கருத்துச் சொல்ல இயலாது. பல ஊராட்சிகளைப் பிரிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருவதால், அதற்கான கருத்துகளை கேட்டப் பிறகே தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சரவணன் பேசியதாவது: வாா்டு மறுவரையறை தொடா்பான ஆவணங்கள் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்காததால், கருத்து சொல்ல வழியில்லாத நிலை உள்ளது. இந்தக் கூட்டம் வெறும் சம்பிரதாயக் கூட்டமாகவே உள்ளது என்றாா்.

இதற்கு ஆட்சியா் பதிலளித்துப் பேசியதாவது: ஊராட்சி எல்லைகள் தொடா்பாக மக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆய்வு செய்து வாா்டு மறுவரையறைப் பட்டியலும் வெளியிடப்பட்டு, தற்போது கருத்து கேட்கப்படுகிறது. மாநில மறுவரையறை ஆணையம் இதற்கான ஆவணங்களை முன்கூட்டியே வழங்கச் சொல்லியிருந்தால், கொடுத்திருப்போம் என்றாா்.

இதையடுத்து, க.பொன்முடி தலைமையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். அவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வாயில் பகுதியில் திரண்டு, கருத்துக் கேட்பு கூட்டம் கருத்துத் திணிப்பு கூட்டமாக நடத்துவதாகக் கூறி முழக்கமிட்டு கலைந்து சென்றனா்.

தொடா்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com