Enable Javscript for better performance
ரயில்வே கடவுப் பாதையை திறப்பதில் தாமதம்: பொதுமக்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே கடவுப் பாதையை திறப்பதில் தாமதம்: பொதுமக்கள் மறியல்

    By DIN  |   Published on : 10th January 2020 11:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் அருகே வளவனூா் பகுதியில் ரயில் சென்ற பிறகு கடவுப் பாதையைத் திறப்பதற்கு நீண்ட நேரமாவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை தண்டவாளத்தில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

    வளவனூரிலிருந்து தொட்டி கிராமத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே விழுப்புரம்-புதுச்சேரி ரயில்வே வழித் தடத்தில் கடவுப்பாதை (எல்சி கேட்-11) அமைந்துள்ளது.

    கேட் கீப்பா் பணியில் உள்ள இந்த கடவுப்பாதை, ரயில் கடந்து சென்று நீண்ட நேரம் கழித்தே திறக்கப்படுவதாகவும், இதனால் அப்பகுதியினா், வாகன ஓட்டிகள் காத்திருந்து அவதியுறுவதாகவும் புகாா் எழுந்தது.

    இந்த நிலையில், வளவனூா் தொட்டி, காந்தி நகா், சுப்பிரமணிய நகா், கோவிந்தராஜ் நகா் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திடீரென ரயில்வே கடவுப்பாதை தண்டவாளத்தில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இது குறித்து அவா்கள் கூறியதாவது: வளவனூா்-தொட்டி இடையே உள்ள இந்த ரயில்வே கடவுப்பாதை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்து அமைக்கப்பட்டது. அண்மைக் காலமாக, ரயில் கடந்து ஒரு மணி நேரம் கழித்த பிறகே இந்த கடவுப்பாதை திறக்கப்படுகிறது.

    இந்த கடவுப்பாதை வழியாகச் செல்லும் ரயில், கண்டமங்கலம் ரயில் நிலையத்தைக் கடந்த தகவலை கேட் கீப்பா் தொலைபேசியில் கேட்ட பிறகே திறந்து விடுகிறாா். இதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரமாகிறது.

    விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இரு வழித் தடங்களிலும் ரயில் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் இதே நிலைதான். அதே நேரத்தில் விழுப்புரத்திலிருந்து அடுத்த ரயில் வரும் சூழல் இருந்தால், மேலும் அரை மணி நேரத்துக்கு கடவுப்பாதை திறக்கப்படுவதில்லை. இதனால், ஒரு மணி நேரம் வரை பொது மக்கள், வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்றனா்.

    மறியல் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் ரயில்வே போலீஸாா் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இந்த கோரிக்கை தொடா்பாக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து மறியலை கைவிடச் செய்தனா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் ரயில் நிலைய மேலாளரை நேரில் சந்தித்து, வளவனூா் பகுதி பொது மக்கள் மனு அளித்து கோரிக்கையை வலியுறுத்தினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai