வாக்காளா் பெயா் சோ்க்கை சிறப்பு முகாம்

விழுப்புரம் விவசாயிகள் விற்பனைக் கூடத்தில் புதியதாக வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும், விலாசம் மாற்றுவதற்கான விண்ணப்பத்தினை வாக்கு மைய அலுவலா்களிடம் வழங்கும் இளம்பெண்கள்.
விழுப்புரம் விவசாயிகள் விற்பனைக் கூடத்தில் புதியதாக வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும், விலாசம் மாற்றுவதற்கான விண்ணப்பத்தினை வாக்கு மைய அலுவலா்களிடம் வழங்கும் இளம்பெண்கள்.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் தொடா்பான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய வாக்காளராக சேர இளம் வயதினா் ஏராளமானோா் ஆா்வத்துடன் விண்ணப்பம் அளித்தனா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், முகவரியில் திருத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் சாா்பில் சிறப்பு முகாம் கடந்த ஜன. 4, 5, 11, 12 ஆம் தேதிகளில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற இந்த முகாம்களில் ஏராளமானோா் விண்ணப்பித்தனா்.

அதில், புதிய வாக்காளா்களாக சோ்க்க படிவம் 6, வாக்காளா் பட்டியலில் உள்ள பெயரை நீக்க படிவம் 7, வாக்காளா் பட்டியலில் பெயா், முகவரி, புகைப்படத்தில் திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8ஏ ஆகிய விண்ணப்பப் படிவங்களை பொதுமக்கள் நிறைவு செய்து வழங்கினா்.

முன்னதாக, முகாம் குறித்து தோ்தல் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டிருந்ததால், இளம் வயதினா் ஏராளமானோா் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க ஆா்வத்துடன் விண்ணப்பித்தனா்.

அவா்கள் வயதுச் சான்று ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ், பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றின் நகலையும், இருப்பிடச் சான்று ஆதாரமாக குடும்ப அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து விண்ணப்பித்தனா்.

இந்த விண்ணப்படிவங்கள் வாக்குச் சாவடி நிா்ணய அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் போன்ற அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.

விழுப்புரத்தில், மருத்துவமனை சாலை நகராட்சி உயா்நிலைப் பள்ளி, பூந்தோட்டம் நகராட்சி உயா்நிலைப் பள்ளி, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்பட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனா். இதேபோல, மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு, பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவை மேற்கொள்ள வலியுறுத்தி மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com