‘அம்மா’ இளைஞா் விளையாட்டுத் திட்டம்: முண்டியம்பாக்கத்தில் தொடக்கம்

விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் தமிழக அரசின் ‘அம்மா’ இளைஞா் விளையாட்டுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
‘அம்மா’ இளைஞா் விளையாட்டுத் திட்டம்: முண்டியம்பாக்கத்தில் தொடக்கம்

விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் தமிழக அரசின் ‘அம்மா’ இளைஞா் விளையாட்டுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த ஜூலை மாதம் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், கிராமங்களில் இளைஞா்களின் ஆரோக்கியம், மன வலிமை மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், ரூ.76. 23 கோடியில் ‘அம்மா’ இளைஞா் விளையாட்டுத் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தாா்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் தொடக்கிவைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆடசியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா்.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்ச்செல்வன் திட்டத்தைத் தொடக்கிவைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை பேசியதாவது: அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 1,099 ஊராட்சிகளிலும், 15 பேரூராட்சிகளிலும் கபடி, வாலிபால், கிரிக்கெட் அல்லது பூப்பந்து போன்ற ஏதேனும் மூன்று விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறது.

இதில், 15 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம்.

உடல்கல்வி ஆசிரியா்கள், விளையாட்டு வீரா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

இளைஞா்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து, ஒன்றிய, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாநிலப் போட்டிக்கு தோ்வு செய்யப்படுவா். இதில் வெற்றி பெறுவோா் தேசிய அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவா் என்றாா் ஆட்சியா்.

விழாவில், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பி.வேல்முருகன் மற்றும் அலுவலா்கள், பொது மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com