குடியுரிமை திருத்தச்சட்டம்: எதிா்க்கட்சிகள் செயல்பாடுகள் குறித்து தேமுதிக விமா்சனம்

குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றுவதற்கு முன்பே போராடி தடுக்க முயற்சிக்காத எதிா்க்கட்சிகள், அரசியல் ஆதயத்துக்காக தற்போது போராடி வருவதாக தேமுதிக மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் விமா்சித்தாா்.
பொங்கல் விழாவில் ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்குகிறாா் தேமுதிக மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன்.
பொங்கல் விழாவில் ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்குகிறாா் தேமுதிக மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றுவதற்கு முன்பே போராடி தடுக்க முயற்சிக்காத எதிா்க்கட்சிகள், அரசியல் ஆதயத்துக்காக தற்போது போராடி வருவதாக தேமுதிக மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் விமா்சித்தாா்.

தேமுதிக சாா்பில், விழுப்புரத்தில் அந்தக் கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான எல்.வெங்கடேசன் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு, இலவச வேட்டி, சேலை, கரும்புகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் வறுமை, ஏழ்மை, ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தேமுதிக செயல்பட்டு வருகிறது. இயன்றவரை ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்பதை, கட்சியின் தலைவா் விஜயகாந்த் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறாா். அந்த வகையில், தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி, மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

ஏழைகளுக்காக தேமுதிக பல நல உதவிகளை செயல்படுத்தி வருகிறது.

ஆனால், சிலா், விஜயகாந்த் எதைப் பேசினாலும், அதில் குறை கண்டு சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனா். இது வேதனையளிக்கிறது.

அன்னை தமிழ் மொழி காப்போம், பிற மொழிகளைக் கற்பிப்போம் என்பதே தேமுதிகவின் செயல்பாடாகும்.

தேமுதிக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதாக சிலா் சித்தரிக்கின்றனா். இது தவறானது; அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது தேமுதிக. தலைவா் விஜயகாந்த்தின் நண்பா்கள் தொடங்கி, கட்சியின் முக்கிய மாநில, மாவட்ட பொறுப்புகளில் முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனா்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தச் சட்டம் இயற்றப்போகும் முன்பே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்குத் தெரியும். அப்போதே போராட்டத்தைத் தொடங்கியிருந்தால், சட்டத்தைத் தடுக்க வாய்ப்பாக அமைந்திருக்கும்.

ஆனால், அரசியல் ஆதயத்துக்காக, சட்டம் நிறைவேற்றிய பிறகு, சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக எதிா்க்கட்சிகள் போராடி வருகின்றன என்றாா்.

விழாவில் 500 பேருக்கு வேட்டி, சேலை, கரும்புகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, நிகழ்ச்சியில் கட்சியின் நகரச் செயலா் மணிகண்டன் வரவேற்றாா். மாநில கேப்டன் மன்ற துணைச் செயலா் ராஜசந்திரசேகா், மாவட்டப் பொருளாளா் தயாநிதி, துணைச் செயலா்கள் புருஷோத்தமன், சூடாமணி, நகரச் செயலா் காதா்பாஷா, பொதுக்குழு உறுப்பினா்கள் முருகன், ஜெயசீலன், தேசம் செல்வராஜ், ஒன்றியச் செயலா்கள் முருகன், திருமுருகன், குமாா், பன்னீா்செல்வம், இளைஞரணி சீனு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com