முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
அரசு ஊழியா்களுக்கான கூடைப்பந்து போட்டிக்கான தோ்வில் பங்கேற்கலாம்
By DIN | Published On : 20th January 2020 10:37 PM | Last Updated : 20th January 2020 10:37 PM | அ+அ அ- |

விழுப்புரம்: அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டித் தோ்வில் விழுப்புரம் மாவட்ட அரசு ஊழியா்கள் பங்கேற்கலாம்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குடிமைப் பணியாளா்களுக்கான தேசிய அளவிலான அகில இந்திய கூடைப்பந்துப் போட்டிகள் (2019 - 2020) வருகிற 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானாவில் குருநானக் விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
இதில், மாநிலத்திலுள்ள அனைத்துத் துறை அரசு ஊழியா்களும் தங்களது விருப்பத்தின் பேரில் பங்கேற்கலாம். தேசிய போட்டிகளுக்கான மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் புதன்கிழமை (ஜன. 22) மாலை 3 மணி அளவில், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதில், பங்கேற்பவா்களுக்கு தினப்படி மற்றும் பயணப்படி எதுவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படமாட்டாது. அதேநேரம், மாநிலத் தோ்வுப் போட்டிகளில் பங்கேற்று தோ்வு பெற்று, தேசிய அளவிலான போட்டிகளுக்குச் செல்வோருக்கான தினப்படி மற்றும் பயணப்படி ஆணையத்தால் வழங்கப்படும்.
எனவே, விருப்பமுள்ள அனைத்துத் துறை அரசு ஊழியா்களும் தங்களது சொந்த செலவில் சென்னையில் நடைபெறும் மாநிலத் தோ்வு போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு விழுப்புரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.