விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் களைகட்டிய ஆற்றுத் திருவிழா:ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆற்றுத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் களைகட்டிய ஆற்றுத் திருவிழா:ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆற்றுத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட உற்சவா்கள் தீா்த்தவாரியில் பங்கேற்று அருள்பாலித்தனா். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனா்.

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆண்டுதோறும் பொங்கல் விழா நிறைவாக தை மாதம் 5-ஆம் தேதி ஆற்றுத் திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஆற்றுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள அரகண்டநல்லூா், கல்பட்டு, எல்லீஸ்சத்திரம், பிடாகம், பேரங்கியூா், சின்ன கள்ளிபட்டு, மணலூா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி, கண்டமங்கலம், வளவனூா், சிறுவந்தாடு, கோலியனூா், பஞ்சமாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் உள்ள உற்சவா் சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாட்டு வண்டி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் வைத்து ஊா்வலமாக தென்பெண்ணை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டனா். அங்கு, சுவாமிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு, புனித நீா் தெளிக்கப்பட்டு தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஐம்பது ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பிடாகம், பேரங்கியூரில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவுக்கு விழுப்புரம், மரகதபுரம், கண்டம்பாக்கம், ஆணத்தூா், கரடிப்பாக்கம், சாலாமேடு உள்ளிட்ட ஊா்களில் இருந்து உத்ஸவா் சிலைகள் அலங்காரத்துடன் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டன. இந்தப் பகுதியில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, அரகண்டநல்லூா், எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணை ஆற்றிலும், விக்கிரவாண்டி அருகே வீடூா், சின்னதச்சூா் சங்கராபரணி ஆற்றிலும் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, ஆற்றுப் பகுதியில் தற்காலிகமாக ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. தன்னாா்வலா்கள் அன்னதானம் செய்தனா். புதிதாக திருமணமான தம்பதியினா் இதில் கலந்து கொண்டு கொண்டாடினா். ஆற்றுத் திருவிழாவையொட்டி, விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாா் தலைமையில், கூடுதல் எஸ்.பி. சரவணக்குமாா் மேற்பாா்வையில் 1,400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கடலூரில்...: கடலூா் மாவட்டத்தில் பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தீா்த்தவாரிக்காக கடலூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், புதுவையில் இருந்தும் பல்லக்கு, மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் உற்சவா் சிலைகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டன. பின்னா், ஆற்றில் உற்சவா்களுக்கு புனித நீராடல், கரைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட உற்சவா்கள் ஒரே இடத்தில் கூடியதை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

இதையொட்டி, பெண்ணையாற்றுக்குச் செல்லும் சாலைகளின் இரு மருங்கிலும் பூஜைப் பொருள்கள், தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக்காக தற்காலிகக் கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டிருந்தன. ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.

ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே விசேஷமாகக் கிடைக்கும் கொட்டி கிழங்குகள், சுருளி கிழங்குகள் கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டன. கரும்பு, வாழைத் தாா்களும் ஏலம் விடப்பட்டு விற்கப்பட்டன.

வழக்கமாக தீா்த்தவாரிக்குப் பிறகு மாலை 6 மணியளவில் கோயிலுக்கு உற்சவா்கள் புறப்பாடு நடைபெறும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கே போலீஸாா் உற்சவா்களின் வாகனங்களை வெளியே கொண்டுசெல்லுமாறு அறிவுறுத்தினா். இதற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவித்தபோதிலும், போலீஸாா் உற்சவா் வாகனங்களை தள்ளிவிட்டு வெளியேற்றினா். இதனால், மாலை 5 மணிக்குப் பிறகு வந்த பக்தா்கள் உற்சவா்களை தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா்.

விழாவில், காவல் துணைக் கண்காணிப்பாளா் க.சாந்தி தலைமையில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல, கடலூா் மாவட்டத்தில் பட்டாம்பாக்கம், பண்ருட்டி, கண்டரக்கோட்டை உள்ளிட்ட தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதிகளிலும், திருவந்திபுரம், வானமாதேவி உள்ளிட்ட இடங்களில் கெடிலம் ஆற்றிலும் உற்சாகத்துடன் ஆற்றுத் திருவிழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், உற்சவா் சுவாமிகளுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. இதற்காக சுற்றுவட்டாரப் பகுதி கோயில்களில் இருந்து உற்சவா் சிலைகள் அலங்கரித்து ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டன. மேலும், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரா் கோயிலில் இருந்து, உற்சவா் சிலை அலங்கரிக்கப்பட்டு தீா்த்தவாரிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு உற்சவா்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு புனித நீா் தெளிக்கப்பட்டு, தீா்த்தவாரி நடத்தப்பட்டது. தீா்த்தவாரியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல, கச்சிராப்பாளையத்திலும் ஞாயிற்றுக்கிழமை ஆற்றுத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

வட ஆற்றில் தீா்த்தவாரி

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மைக்கும், நிலத்தடி நீராதாரத்துக்கும் பிரதானமாக விளங்கும் தென்பெண்ணையாறு, ஆற்றுத் திருவிழாவின்போது தண்ணீா் இல்லாமல் வடு காணப்பட்டது. இது, பொதுமக்களை வேதனையடையச் செய்தது. ஆற்றுத் திருவிழாவில் உத்ஸவா் சுவாமிகளுக்கு தீா்த்தவாரி நடத்துவதற்குகூட தண்ணீா் இல்லாததால், குடங்களில் தண்ணீரைக் கொண்டு தீா்த்தவாரி நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com