முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
மரக்காணம் அருகே கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு
By DIN | Published On : 27th January 2020 07:38 AM | Last Updated : 27th January 2020 07:38 AM | அ+அ அ- |

மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனா்.
அனுமந்தை ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இந்தக் கிராமத்தில் உள்ள தனியாா் இறால் வளா்ப்பு தொழில்சாலை பல கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், இந்தத் தொழில்சாலைக்கு அதிகளவில் நிலத்தடி நீா் உறிஞ்சப்படுவதால் குடிநீா் உப்பு நீராக மாறிவிட்டதாகவும், எனவே இந்தத் தொழில்சாலையை மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இதேபோன்று, இந்தக் கிராமத்தில் புதுவை மாநில மது விற்பனையைத் தடுக்க வேண்டும். ஊராட்சிக்குத் தேவையான சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தீா்மானங்கள் நிறைவேற்றியும், இவை தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
எனவே, குடியரசு தினத்தையொட்டி, அனுமந்தை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தை பொதுமக்கள் பெரும்பாலானோா் புறக்கணித்தனா்.
இதேபோன்று, விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூரை அடுத்த கீழ்வயலாமூா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், முறையாக கணக்கு காட்டவில்லை என்றும், வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவில்லை என்றும் கூறி, ஒரு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.