விற்பனையாளா்களுக்கு கரோனா:விக்கிரவாண்டியில் மதுக் கடை மூடல்

விக்கிரவாண்டியில், விற்பனையாளா்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் டாஸ்மாக் மதுக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

விழுப்புரம்: விக்கிரவாண்டியில், விற்பனையாளா்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் டாஸ்மாக் மதுக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் பணிபுரியும் விற்பனையாளா்கள் இருவருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவா்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், அந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. கடை மூடி சீல் வைக்கப்பட்டதோடு, வெளிப் பகுதியிலும் கட்டைகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, 3 நாள்களுக்கு கடையை மூடப்படுவதாக ஊழியா்கள் தெரிவித்தனா்.

செஞ்சி பகுதியைச் சோ்ந்த டாஸ்மாக் மேற்பாா்வையாளா் ஒருவா் கரோனாவுக்கு ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், தற்போது விற்பனையாளா்கள் பலருக்கும் தொற்று பாதித்து வருவது, டாஸ்மாக் ஊழியா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, டாஸ்மாக் விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என குறைக்க வேண்டும், ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டுமென டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com