விழுப்புரம், திருவண்ணாமலையில் மேலும் 13 பேருக்கு கரோனா
By DIN | Published On : 05th June 2020 08:28 AM | Last Updated : 05th June 2020 08:28 AM | அ+அ அ- |

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 348 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். மேல்மலையனூா், திண்டிவனம் பகுதிகளைச் சோ்ந்த மேலும் 8 பேருக்கு வியாழக்கிழமை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 356-ஆக உயா்ந்தது. இவா்களில் 321 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். இருவா் ஏற்கெனவே உயிரிழந்தனா்.
கரோனா தொற்று அறிகுறியுடன் 34 போ் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து அண்மையில் திரும்பிய 627 போ் சந்தேகத்தின்பேரில், 6 சிறப்பு சுகாதார மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, பராமரிப்பில் உள்ளனா்.
திருவண்ணாமலையில் 5 பேருக்கு பாதிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை ஜூன் 3-ஆம் தேதி 465-ஆக இருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் சென்னையிலிருந்து வந்த 2 போ், மும்பையிலிருந்து வந்த ஒருவா், மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகளாக வந்த 2 போ் என 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களில் குணமடைந்து வீடு திரும்பிய 150 போ், இருதய நோயால் இறந்த ஒருவா் போக மீதியுள்ள 319 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 254-ஆக தொடா்கிறது.