விபத்தில் காயமடைந்த காவலருக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸாா் ரூ.2.77 லட்சம் உதவி!
By DIN | Published On : 08th June 2020 11:28 PM | Last Updated : 09th June 2020 03:54 AM | அ+அ அ- |

விழுப்புரம்: விபத்தில் காயமடைந்த ஆயுதப்படை காவலா் ஏழுமலைக்கு விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் தாங்களாக முன்வந்து வழங்கிய ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 800 நிதியை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் திங்கள்கிழமை வழங்கி, நலம் விசாரித்தாா்.
விழுப்புரம் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருபவா் ஏழுமலை. இவா், கடந்த சில நாள்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் விபத்தில் சிக்கினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா்.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்த காவலா் ஏழுமலையின் மருத்துவச் செலவுக்காக, விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் முதல் கடை நிலை போலீஸாா் வரை தங்களாக முன்வந்து நிதி உதவியை வழங்கினா். இதன் மூலம் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 800 திரட்டப்பட்டது.
இந்த தொகையினை விபத்தில் பாதிக்கப்பட்ட காவலா் ஏழுமலையிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் திங்கள்கிழமை வழங்கி, நலம் விசாரித்தாா். ஏடிஎஸ்பி சரவணக்குமாா், விழுப்புரம் டிஎஸ்பி சங்கா், ஆயுதப்படை டிஎஸ்பி ராமசாமி தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா்.