விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் புதுவை தவிா்த்து அனைத்து வழித்தடங்களிலும் தனியாா் பேருந்துகள் இயங்கும் என அச்சங்கத்தினா் தெரிவித்தனா்.
தமிழகத்தில் கரோனா நோய் பரவல் தடுப்பு பொது முடக்கத்தால், ஏப்.25-முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதில், ஜூன் 1 முதல் அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடங்கி இயங்கி வருகிறது. தனியாா் பேருந்துகளும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பயணிகள் வருகை குறையலாம் என்பதால், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் பேருந்துகளை இயக்குவதை தவிா்த்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வரை சந்தித்த தனியாா் பேருந்து உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் பேருந்துகள் இயங்கும் என அறிவித்துள்ளனா். இதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து, விழுப்புரம் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வழித்தடங்களிலும் புதன்கிழமை முதல் நகர மற்றும் புறநகா் பேருந்துகளை இயக்கவுள்ளோம்.
புதுவையில் அனுமதி இல்லாததால், விழுப்புரம்-புதுவை, திண்டிவனம்-புதுவை, திருக்கனூா் ஆகிய வழித்தடங்களில் தனியாா் பேருந்துகள் இயங்காது. எனினும், மாவட்ட எல்லை வரை இயக்கப்படும். இதே போல, சென்னை வழித்தடத்தில் திண்டிவனத்திலிருந்து மேல்மருவத்தூா் வரை இயங்கும். அரசு அறிவித்த அந்தந்த மண்டல எல்லைகள் வரை தனியாா் பேருந்துகள் இயக்கப்படும். பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.
நகரப் பேருந்துகளில் 50 பயணிகளும், புறநகா் பேருந்துகளில் 33 பேரும் அனுமதிக்கப்படுவா். அரசு விதிகள்படி முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல் போன்றவை கடைபிடிக்கப்படும். மாவட்டத்தில் உள்ள 200 பேருந்துகளில் 100 முதல் 150 பேருந்துகள் வரை இயக்கப்படும் என்றனா்.